2025 இல் அரச ஊழியர்களுக்கு வரலாறு காணாத சம்பள உயர்வு..!!

 தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் மாறினால், 2025 ஜனவரியில் அரச ஊழியர்கள் சம்பள உயர்வை இழக்க நேரிடலாம்

 தபால் வாக்களிப்பின்போது அரச ஊழியர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்

 ஜனாதிபதியின் பொருளாதார வேலைத்திட்டத்தின் பெறுபேறுகளை அரச ஊழியர்கள் இன்று பெற்றுள்ளனர்

 கிரீஸைப் பார்த்து முடிவெடுங்கள்

  • பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன

 இந்த நாட்டை மீண்டும் ஸ்திரமற்ற நிலைக்கு மாற்றாதீர்கள்

  • தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி

 ஜனாதிபதி ரணிலைத் தவிர நாட்டுக்கு வேறு மாற்று வழியில்லை

  • ஐக்கிய இலங்கை முன்னணியின் தலைவர் ஜகத் கருணாசேன

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரச உத்தியோகத்தர்கள் தமது தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்துவதில் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும் என்றும், தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், 2025 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழங்க வேண்டிய சம்பள உயர்வை இழக்கும் அபாயம் உள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன வலியுறுத்தினார்.

2022ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்றதும் நாட்டைக் கட்டியெழுப்புவேன் என்றும் அதற்காக சிறிது காலம் பொறுமையாக ஆதரவளிக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து, இன்று செயலில் நிரூபணமாகியுள்ளதாகக் குறிப்பிட்ட ராஜித சேனாரத்ன, கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார வேலைத்திட்டத்தின் பெறுபேறுகள் அரச ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் (01) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ராஜித சேனாரத்ன கூறியதாவது:

“இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் முதற்கட்டமாக இம்மாதம் 4, 5, 6 ஆகிய மூன்று நாட்களிலும் அரச ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அரச பணியில் 14 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த ஆண்டு 700,000 இற்கும் அதிகமானோர் தபால் மூலம் வாக்களிக்கின்றனர்.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது. அது அரச சேவையின் அடிப்படை சம்பளத்தை இரட்டிப்பாக்குவது மற்றும் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பானது. இதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அரச சேவையாளர்களின் சம்பளத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரச சேவையில் தொழிற்சங்கத் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளேன். ஆனால் இவ்வளவு அதிக சம்பள உயர்வு வரலாற்றில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாகக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான அடித்தளத்தை அமைப்பதற்காக அரச ஊழியர்களின் சம்பள மட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அரச சேவையின் ஒவ்வொரு தரத்தினதும் ஆரம்ப சம்பளம் பல கட்டங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி,

  • அலுவலக உதவியாளர் சேவையின் மூன்றாம் தரத்தின் சம்பளம் 5,450 ரூபாயினாலும், இரண்டாம் தரம் 8,760 ரூபாயினாலும், முதலாம் தரம் 10,950 ரூபாயினாலும் அதிகரிக்கப்படும். அந்தச் சேவையில் விசேட தரத்தின் சம்பளம் 13,980 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது.
  • சாரதி சேவையின் மூன்றாம் தர சம்பளம் 6,960 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தரத்தின் சம்பளம் 9,990 ரூபாயும், முதலாம் தரத்திற்கு 13,020 ரூபாயும், விசேட தரத்திற்கு 16,340 ரூபாயும் சம்பள அதிகரிப்பு கிடைக்கும்.
  • மூன்றாம் நிலை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு ரூ.8,340 சம்பள உயர்வும், இரண்டாம் தரத்திற்கு ரூ.11,690 சம்பள உயர்வும், முதலாம் தரத்திற்கு ரூ.15,685 சம்பள உயர்வும் கிடைக்கும்.
  • முகாமைத்துவ சேவை அதிகாரி/முகாமைத்துவ உதவியாளர் தரம் III இற்கு ரூ. 10,140 மற்றும் தரம் II இற்கு ரூ.13,490 உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் தர சம்பளம் 17,550 ரூபாயால் அதிகரிக்கப்படும்.
  • அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் மூன்று சம்பள உயர்வு 12,710 ரூபாயாகும். இரண்டாம் தரத்திற்கு ரூ.17,820, முதல் தரத்திற்கு ரூ.25,150 அதிகரிக்கப்படும்.
  • பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப சுகாதார பணியாளர் மூன்றாம் தரத்தின் சம்பளம் 12,885 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது. இரண்டாம் தரத்திற்கு ரூ.17,945 சம்பள உயர்வும் முதலாம் தரத்திற்கு ரூ.25,275 சம்பள உயர்வும் கிடைக்கும்.

• கதிரியக்க நிபுணர் மற்றும் மருந்தாளர் மூன்றாம் தரத்திற்கு ரூ.13,280 சம்பள அதிகரிப்பும், இரண்டாம் தரத்திற்கு ரூ.18,310 சம்பள உயர்வும் முதலாம் தரத்திற்கு ரூ.25,720 சம்பள உயர்வும் கிடைக்கும்.

  • மூன்றாம் தர தாதியர் உத்தியோகத்தரின் சம்பளம் 13,725 ரூபாயாலும், இரண்டாம் தரத்திற்கு ரூ.18,835 சம்பள அதிகரிப்பும், முதலாம் தரத்தினருக்கு ரூ.26,165 சம்பள உயர்வும் வழங்கப்படவுள்ளது.
  • அதிபர் சேவையின் மூன்றாம் தரத்தின் சம்பளம் 23,425 ரூபாயாலும், இரண்டாம் தரத்தின் சம்பளம் 29,935 ரூபாயாலும், மூன்றாம் தரத்திற்கு 39,595 ரூபாயாலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • ஆசிரியர் சேவையில் உள்ள கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு ரூ.17,480 சம்பள உயர்வும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.19,055 அதிகரிப்பும், இரண்டாம் தரத்திற்கு ரூ.20,425, முதல் தரத்திற்கு 38,020 ரூபாயும் முன்மொழியப்பட்டுள்ளது.
  • ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் சம்பள உயர்வாக ரூ.10,704 பெறுகிறார். பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சம்பள அதிகரிப்பு ரூ.13,210, சப்-இன்ஸ்பெக்டர்களின் சம்பளம் ரூ.14,050 அதிகரிக்கப்படும். பொலிஸ் பரிசோதகரின் சம்பளம் ரூ.18,290, பிரதான பொலிஸ் பரிசோதகரின் சம்பளம் ரூ.23,685 அதிகரிக்கப்படவுள்ளது.
  • கிராம உத்தியோகத்தர் முதலாம் தர சம்பளம் 11,340 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது. அந்த சேவையின் இரண்டாம் தரத்திற்கு ரூ.14,690, முதலாம் தரத்தினருக்கு ரூ.18,750 சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது. நிர்வாக கிராம அதிகாரியின் சம்பளம் ரூ.23,575 அதிகரிக்கும்.
  • உதவிச் செயலாளர், உதவிப் பணிப்பாளர், கணக்காளர், உதவிப் பிரதேச செயலாளர், உதவி ஆணையாளர் ஆகியோரின் சம்பளம் 28,885 ரூபாயால் அதிகரிக்கப்படும். பிரதி பணிப்பாளர் பிரதி ஆணையாளர்களின் ஆரம்ப சம்பளம் 43,865 ரூபாயால் அதிகரிக்கப்பட உள்ளது. பிரதேச செயலாளர், பணிப்பாளர், ஆணையாளர், சிரேஷ்ட உதவி செயலாளர் ஆகிய பதவிகளுக்கான சம்பளம் 57,545 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது.
  • ஆரம்ப தர வைத்தியர்களின் சம்பளம் 35,560 ரூபாயால் அதிகரிக்கப்படும். இரண்டாம் தர வைத்தியர்களின் சம்பளம் ரூ.39,575 ஆல் அதிகரிக்கப்படவுள்ளது. முதலாம் தர வைத்தியர்களுக்கான சம்பள அதிகரிப்பு 53,075 ரூபாயாலும், மேலதிக செயலாளர் மற்றும் விசேட வைத்தியர்களின் சம்பளம் 70,200 ரூபாயாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

அதேநேரத்தில், அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அனைத்து சம்பள உயர்வு மதிப்புகளையும் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள், அரச தொழில் முயற்சிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் இராணுவத்தினருக்கு சம்பளம் அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரச ஊழியர்களுக்கு இவ்வளவு அதிக சம்பள உயர்வு எந்த காலத்திலும் கிடைத்ததில்லை.

உலகில் எந்த நாடும் இவ்வளவு சீக்கிரம் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு வந்ததில்லை. கிரீஸ் வங்குரோத்து நிலையில் இருந்து வெளியே வர பத்து வருடங்கள் ஆனது. வங்குரோத்தான பிறகு கிரீஸில் நியமிக்கப்பட்ட பிரதமர் சர்வதேச நாணய நிதியத்தையும் இப்படித்தான் கையாண்டார். அந்த வகையில், செயற்படும்போது நிலைமை மிகவம் கடினம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்நாட்டைப் பொறுப்பேற்றபோது, இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவேன் என்று கூறினார். இக்கட்டான காலம் வரும் எனவும், பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 2022 இல் அவர் கூறிய கதை இப்போது உண்மையாகிவிட்டது. அவர் செயலிலும் காட்டியிருக்கிறார்.

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ கூட இலங்கை குறுகிய காலத்தில் அடைந்துள்ள முன்னேற்றம் பொருளாதாரத்தில் ஒரு அதிசயம் என குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த போது, இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் அசாதாரணமானது என அறிவித்தார். குறுகிய காலத்தில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டு இன்று வெளிநாட்டுத் தலைவர்கள் வியப்படைகின்றனர்.

எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் பெறுபேறுகளை இன்று அவர் அரச ஊழியர்களுக்கும் வழங்கியுள்ளார். நேற்றிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. வரி விதிப்பு திருத்தம் குறித்து அவர் அறிவித்துள்ளார். இவை படிப்படியாக நடைபெறும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் அது தொடர்பில் படிப்படியாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வளர்ச்சியடைந்து வருவதை அவர்கள் ஏற்றுக்கொண்டதால், அரசாங்கம் முன்வைத்த சாதகமான முன்மொழிவுகளுக்கு அவர்கள் அங்கீகாரம் வழங்கும் நிலையை அடைந்துள்ளனர்.

அத்துடன், இந்த உடன்படிக்கை மாற்றப்பட்டாலோ மீறப்பட்டாலோ இலங்கையுடனான வேலைத்திட்டத்தில் இருந்து முற்றாக விலகிக் கொள்வதாக சர்வதேச நாணய நிதியம் ஆகஸ்ட் 9 ஆம் திகதி அறிவித்தது. இன்னல்களைப் போக்கவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தேர்தலில் தமக்கு வாக்களிக்க வேண்டும் என்று கிரீஸ் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்தார். எனவே, கிரீஸ் வேலைத்திட்டத்தில் இருந்து சர்வதேச நாணய நிதியம் விலகியது.

வருமானத்துக்கும் செலவுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல் நிவாரணப் பொதிகளை வாக்குறுதி அளித்து கடனை அடைக்க முடியாது. இதனால் அவரது ஆட்சி மூன்றே மாதங்களில் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு வந்த மூன்றாவது பிரதமரின் ஆட்சி 4 மாதங்களில் முடிவடைந்தது. இதன் மூலம் ஓராண்டில் 4 அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சர்வதேச நாணய நிதியம் விலகிக்கொண்டது.

லெபனான், ஆர்ஜென்டினா, வெனிசுலா போன்ற நாடுகள் இன்னும் வங்குரோத்து நிலையிலேயே உள்ளன. ஆனால் அவர்கள் அனைவருக்கும் முன்னரே எமது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளது. அண்மையில் வங்குரோத்து நிலையை அடைந்த எதியோப்பியாவானது, இலங்கை பயணித்த பாதையில் செல்ல வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

எனவே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமது வாக்குகளைப் பயன்படுத்துவதில் நாட்டின் ஒட்டுமொத்த அரச ஊழியர்களும் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும். தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், தற்போது அங்கீகரிக்கப்பட்ட அரச ஊழியர் சம்பள உயர்வு முற்றிலும் இழக்கப்படும். எனவே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறச்செய்ய வேண்டும்.” என்றும் தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் பிரதமராகி கூறிய அதே விடயத்தையே ஜனாதிபதியாகவும் தெரிவித்தார். நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்று பாராளுமன்றத்தில் அனைவரையும் அழைத்தார். அனைவரும் ஒரே கட்சியாக செயல்படுவோம். ஒன்றிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம். அதன்பிறகு ஒரு தேர்தல் வந்ததும், உங்கள் இஷ்டம் போல் வந்து போட்டியிடுங்கள் என்றார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அதனை நிராகரித்தார்.

புத்திசாதுரியமாக சிந்திக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்கென்று யாரும் இல்லாத நேரத்தில், இந்த நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்று பலர் கூறிய நேரத்தில், வங்குரோத்தான நாட்டைக் காப்பாற்ற ஒருவர் முன் வந்தார். அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே என்று கூறிக்கொள்கிறேன்.

அவரால் முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார். எனவே, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். எனவே, தேசிய ஐக்கிய முன்னணி என்ற வகையில், இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதற்கு நாங்கள் மிகவும் உறுதியான தீர்மானத்தை எடுத்துள்ளோம்” என்றார்.

ஐக்கிய இலங்கை முன்னணியின் தலைவர் ஜகத் கருணாசேன,

“2022 இல் இந்த நாடு கடுமையான பொருளாதாரப் படுகுழியில் விழுந்தது. போராட்டத்தின் பக்கவிளைவாக பிரதமர் பதவி விலக நேரிட்டது. அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி, பலரை பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்தார். அன்றைய தினம் சஜித்தும் அனுரவும் இந்த சவாலான சந்தர்ப்பத்தை ஏற்றுக்கொள்ளாமல் பயந்து ஓடிவிட்டனர்.

பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைக் கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த வேளையில் அவர் இந்த சவாலை சளைக்காமல் ஏற்றுக்கொண்டார். பொருளாதார நோக்குடன் இந்த நாட்டை கட்டியெழுப்பினார். அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்தான் நாட்டைக் காப்பாற்றினார். அவருக்கு தொலைநோக்கு பார்வையும், முதிர்ந்த அரசியல் அறிவும் உள்ளது. எனவே செப்டெம்பர் 21ஆம் திகதி இந்நாட்டின் நன்றியுள்ள மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். எனவே, ஐக்கிய இலங்கை முன்னணி என்ற ரீதியில் அவருக்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம்” என்றும் அவர் தெரிவித்தார்.