•சஜித்திற்கு வழங்கும் வாக்குகள் அனுரவுக்கு வழங்கும் வாக்குகளுக்கு சமமானவை என்பதை ஐ.தே.கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும்.
•கோட்டாபய ராஜபக்ஷ செய்ததையே சஜித்தும் அனுரவும் செய்ய முனைகின்றனர்.
- தொம்பே பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி
-கொட்டும் மழையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்கு காத்திருந்த தொம்பே மக்கள்!
நாடு நெருக்கடியில் இருந்த போது பிரதமர் பதவி விலகிய சந்தர்ப்பத்தில் அந்தப் பதவியை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறிய போதிலும், சஜித் பிரேமதாச அதனை ஏற்காது ஓடி ஒளிந்துவிட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செய்த தவறையே அனுரவும் சஜித்தும் செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வீட்டைக் கட்டுவதைப் போல படிப்படையாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும், ரூபாய் வலுவடைந்ததால் பொருட்களின் விலைகள் குறைந்தது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தொம்பே பிரதேசத்தில் இன்று நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மழையுடன் கூடிய காலநிலை நிலவியதால் இந்தக் கூட்டதில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதிக்கு அறிவித்த போதிலும், மக்கள் தனக்காக மழையில் நனைந்துகொண்டு காத்திருப்பதாக கூறி, அந்தக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க பங்கெடுத்தார்.
கொட்டும் மழையில் மக்கள் ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருந்தனர்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“வவுனியாவில் ஆரம்பித்து கெகிராவ, சிலாபம் ஆகிய கூட்டங்களை முடித்துவிட்டு தொம்பே வந்ததால் தாமதமாகிவிட்டது. அதனால் மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். மக்கள் மழையில் நனைந்துகொண்டு காத்திருந்தீர்கள். நீங்கள் நோய்வாய்ப்பட்டால் செப்டம்ர் 21 வாக்களிக்க முடியாமல் போகும் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.
இரு வருடங்களுக்கு முன்பு வரிசையில் நின்றதாலேயே இன்று பலர் இங்கு நிற்கிறீர்கள். அன்று இறப்பதற்கும் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. பிரதமர் விலகினால் எதிர்கட்சித் தலைவருக்கு இடமளிக்க வேண்டும் என்று சுமந்திரன் எம்.பி கூறினார்.
ஆனால் அவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள பயமாக இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார். சரத் பொன்சேகாவும் மறுத்தார். அனுரகுமார கேட்கவே இல்லை. ஆனால் நாட்டின் நிலை மோசமாக உள்ளதை அறிந்தே நான் ஏற்றுக்கொண்டேன். இப்போது என்னோடு இருப்பவர்கள் எனக்கு ஆதரவளித்தால் நான் ஏற்றுக்கொண்டேன்.
நாட்டை பொறுப்பேற்க விரும்பாத சஜித்தும் அனுரவும் நான் பதவியேற்பதையும் விரும்பவில்லை. பாராளுமன்றத்தை கையகப்படுத்தவும் ஒரு குழு வந்தது பாராளுமன்றத்திலிருந்த தலைவர்கள் அஞ்சி ஓடினர். முடக்க வந்தவர்களை இராணுவத்தை கொண்டு தடுத்தோம்.
வீட்டைக் கட்டுவதை போல படிப்படையாக நாட்டைக் கட்டியெழுப்புவேன். ரூபாய் வலுவடைந்ததால் பொருட்களின் விலை குறைந்தது. மொத்த தேசிய உற்பத்தியை அதிகரித்து வாழ்க்கைச் சுமையை குறைப்பேன். அனுரவும் சஜித்தும் வரியை குறைப்பதாக சொல்கிறார்கள். கோட்டாய ராஜபக்ஷ செய்ததையே அவர்களும் செய்யப் பார்க்கின்றனர்.
இளையோருக்கு நான்கு வருடங்கள் தொழில் கிடைக்கவில்லை. அரச, தனியார் துறைகளில் அவர்களுக்கு பயிற்சியுடன் வேலை வழங்குவோம். நவீன விவசாயத்திற்குள் உள்வாங்குவோம். ஏற்றுமதியை ஊக்குவிப்போம். சுற்றுலாவை ஊக்குவிப்போம். புதிய முதலீடுகளை கொண்டுவர தனியொரு வேலைத்திட்டம் உள்ளது.
கேரகலவில் முதலீட்டு வலயத்தின் 3 ஆவது வலயம் அமைக்கப்படும். அதனால் பெருமளவானவர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும். கம்பஹாவை நானே அபிவிருத்தி செய்தேன். சீனாவிற்கு தூரியான் ஏற்றுமதி செய்ய துரியான் செய்கைகளை புதிதாக அமைப்போம்.
அதேபோல் சஜித்திற்கும் வழங்கும் வாக்குகள் அனுரவுக்கு வழங்கும் வாக்குகளுக்கு சமமானவை என்பதை ஐக்கிய தேசிய கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் செப்டம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது முதலீட்டு வலயமும் கிடைக்காது.” என்றார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன
“நாட்டு மக்கள் மீது இருந்த பற்றும், அரசியல் அனுபவமும் இருந்ததால் ரணில் விக்ரமசிங்க நாட்டை ஏற்றுக்கொண்டார். பல கட்சிகள் அவருக்கு உதவியுள்ளன. ஆனால் அவர் நாட்டின் அனைத்து மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்.
நாடு வங்குரோத்து அடைந்தபோது எந்த நாடும் இலங்கையின் கோரிக்கையை ஏற்கவில்லை. ஜனாதிபதி தனது சர்வதேச தொடர்புகளைக் கொண்டு நாட்டை மீட்டும் சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்தார். அரசாங்கம் ஒன்றே இல்லாத நாட்டை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போதைய நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறார்.
நாமும் அரசாங்கத்துடன் ஒன்றாக இருந்து ஜனாதிபதிக்கு ஆதரவளித்தோம். அதனால் நாடு அழிவிலிருந்து மீண்டு வந்தது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோடு ஒப்பிடுகைளில் எதிர்தரப்பு வேட்பாளர்கள் இருவருக்குமே அரசியல் செயற்பாடுகள் மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்து அனுபவம் இல்லாதவர்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஜனாதிபதியின் அனுபவத்தினால் மட்டுமே இன்று இந்த நாட்டில் பொருளாதார நிலைத்தன்மை உருவாகியுள்ளது.
எனவே தபால் வாக்குகள் இடம்பெறவுள்ள நிலையில், நாட்டில் பொருளாதார நெருக்கடி வந்தபோது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்கள் சகலரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.” என்றும் வலியுறுத்தினார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாம் பாராளுமன்றத்திலேயே முதலில் தெரிவு செய்தோம். அவரை மக்கள் வாக்குளால் ஜனாதிபதியாக தெரிவு செய்து நாட்டை முன்னேற்றுவதற்கான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.
இப்போது சஜித்துடன் நல்ல குழு இருப்பதாக சொல்கிறார்கள். அந்த நல்ல குழு அன்று ஓடி மறைந்துகொண்டதை மறந்துவிட்டனர்.
ஜேவீபியினர் நகர சபையை கூட நிர்வகித்ததில்லை. அவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியுமா? கல்வி துறை, சுற்றாடல் துறையின், சமூர்த்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் காணப்பட்ட சம்பள பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி தீர்வு வழங்கினார். ஆர்பாட்டங்களை தூண்டியவர்களும் களத்தில் உள்ளனர். ஆனால் அவர்களிடம் தீர்வுகள் எவையும் இல்லை. அடுத்த வருடத்திலும் சம்பள அதிகரிப்பு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அடுத்த ஜனவரி மாதத்திலிருந்து கீழ் மட்ட அரச ஊழியர் ஒருவரின் சம்பளம் 55 ஆயிரம் ரூபாய் வரையில் அதிகரிக்கும். இப்போது சஜித் 57 ஆயிரம் ரூபா தருவதாக சொல்கிறார். அதற்காக வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் எவையும் அவருக்கு தெரியாது. ” என்றார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
“இன்று காலநிலை மோசமாக இருப்பதால் ஜனாதிபதியை இவ்விடத்திற்கு அழைத்து வராமல் இருக்க தீர்மானித்தோம். ஆனால் மக்கள் தனக்காக மழையில் நனைந்துகொண்டு காத்திருக்கும் மக்களைப் பார்ப்பதற்காக வருவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.
எல்லா தருணங்களில் நாட்டை காக்கும் தலைவர்களுடனேயே இருந்திருக்கிறோம். அந்த வகையில் பொருளதார நெருக்கடியிலிருந்து மீண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்திருக்கிறோம். ஜே.வீ.பீ அராஜக முறையில் ஆட்சியை ஏற்றுக்கொள்ள முயற்சிக்கிறது. அவ்வாறான தலைவர்களால் நாட்டை ஆள முடியாது. பங்களாதேஷ் இன்று அவ்வாறான நிலைக்கே முகம்கொடுத்திருக்கிறது.” என்றார்.
காலநிலை மாற்றம் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன
“இன்று நாடு அனுரவுக்கு என்று சொல்கிறார்கள். மறுபுறம் முழு நாடும் சஜித்துக்கு என்கிறார். ஆனால் இலங்கையின் நிலையைப் பற்றி சிந்திக்கும் ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே. அவர் நாட்டைப் பொறுப்பேற்றதாலேயே இன்று மக்கள் மூச்சுவிடும் நிலைமை உருவாகியிருக்கிறது.
அவர் சவாலை ஏற்றிருக்காவிட்டால் இன்று நாடு இருக்கும் நிலையை சிந்தித்துப் பார்க்க முடியாது. நாட்டின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கி வரிசைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். குறுகிய காலத்தில் அந்த மாற்றத்தை செய்தது அவரின் சாதனையாகும்.
ஐரோப்பிய நாடுகள் வங்குரோத்து நிலையை அடைந்த காலத்தில் 10 வருடங்களுக்கு பின்னரே மீண்டு வந்தன. முன்னாள் ஜனாதிபதியை பலரும் அவதூறு பேசுகின்றனர். ஆனால் அவர் நம்பியிருந்த ஆலோசகர்களே அவரை ஏமாற்றினர். அவ்வாறு ஏமாற்றிய நாலக கொடஹேவா போன்றவர்கள் இன்று சஜித்தின் மேடையில் ஏறியுள்ளனர். அனுர ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அரச ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிப்பதாக கூறுகிறார். அப்படிச் செய்வதால் நாட்டின் பணவீக்கம் பெருமளவில் அதிகரித்து மக்கள் கஷ்டத்தில் தள்ளப்படுவர் என்பது அவர்களுக்கு விளங்கவில்லை.” என்றார்.
பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்
“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றியுள்ள அனைத்து உரைகளிலும் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். அதேபோல் இன்று 3 தேர்தல் விஞ்ஞாபனங்கள் வௌியிடப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஜேவீபீயினதும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறப்பட்டுள்ள விடயங்கள் ஒன்றுடன் ஒன்று முரணாக உள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான சரியான முன்னேற்றத் திட்டத்தை கொண்டிருக்கிறது. அதனால் மட்டுமே நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
அதனால் கேஸ் சிலிண்டர்களுக்கு கயிறு கட்டி பாதுகாத்த நாட்களையும் இரவையும் பகலையும் சிலிண்டருடன் வீதிகளில் கழிந்த நாட்களையும் மக்கள் மறந்துவிடக்கூடாது. எனவே, விதிவிலக்காக ஜனாதிபதிக்கு சிலிண்டர் சின்னம் கிடைத்திருக்கிறது. எதிர்தரப்பு வேட்பாளர்கள் சொந்த விருப்பங்கள் பற்றி பேசும்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே நாட்டு மக்களுக்காக சிந்திக்கிறார்.” என்றார்.