வரிசை யுகத்திற்கு முடிவுகட்டி பொருளாதார மாற்றத்திற்கு அடித்தளமிட்ட எனக்கு தேர்தலில் போட்டியிட உரிமை உள்ளது.
மக்கள் சிரமப்பட்டபோது தப்பியோடிய சஜித்துக்கும் அனுரவுக்கும் செப்டெம்பர் 21ஆம் திகதி உரிய இடத்தை வழங்க மறக்க வேண்டாம்.
கோட்டாபயவின் கொள்கையை ஒத்த கொள்கையே சஜித்தும் அநுரவும் முன்வைப்பு: வரியைக் குறைத்து அரச வருமானத்தைக் குறைத்தால்
மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும்.
- ஜனாதிபதி
கடந்த இரண்டு வருடங்களில் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரத்தைப் பலமான ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதற்காகவே தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகவும் அதற்காக 5 வருட கால அவகாசத்தை மாத்திரமே கோருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வரிசை யுகத்தை நிறைவு செய்து, வாழ்க்கைச் சுமையை குறைத்து, வரிச் சலுகைகளை வழங்கி, இந்த நாட்டில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அடித்தளமிட்ட தனக்கு தேர்தலில் போட்டியிட உரிமை இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
மக்கள் சிரமப்பட்டபோது ஓடிப்போனவர்களுக்கு செப்டம்பர் 21 ஆம் திகதி மறக்காமல் அவர்களுக்கு உரிய இடத்தை வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வவுனியா யங் ஸ்டார் விளையாட்டரங்கில் இன்று (01) காலை நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
வரிகளைக் குறைத்து அரச வருமானத்தை குறைக்கும் கோட்டாபய ராஜபக்சவின் கொள்கையே சஜித் மற்றும் அநுரவின் கொள்கைகளாகும். ஆனால் உற்பத்தியை அதிகரித்து அரச வருமானத்தை அதிகரிப்பதே தமது கொள்கை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
”இரண்டு வருடங்களுக்கு முன்னர் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்றி மக்கள் இருந்தனர். பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஷபக்ச விலகினார். சஜித் பதவியை ஏற்பார் என்று நாம் நினைத்தோம். முடியாது என சஜித் அறிவித்தார். மறுநாள் சரத் பொன்சேக்காவை பதவி ஏற்கப் போவதாக அறிந்தோம். ஆனால் யாரும் ஏற்கவில்லை. அதன்பின்னர் கோட்டாபய எனக்கு அழைப்பு விடுத்தார். நான் தனியாகச் சென்றேன். பொறுப்பை ஏற்குமாறு இங்குள்ள எம்.பிகள் எனக்கு தெரிவித்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகிய போது எனக்கு பொறுப்பேற்ற வேண்டாம் என்றனர். அனைவரும் தப்பி ஓடினார்கள். அன்று நான் நாட்டைப் பொறுப்பேற்கவில்லையெனில், இன்னுமொரு பங்களாதேஷாக எமது நாடு மாறியிருக்கும். அந்த நிலையில் என்னை ரணில் ராஜபக்ஷ என்று அவர்கள் திட்டினார்கள். இன்று ராஜபக்ஷவினர் தனியாகச் சென்றுள்ளனர்.
பங்களாதேஷாக மாற இருந்த நாட்டை நான் மீட்டுள்ளேன். பங்களாதேஷில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டும் தேர்தல் நடத்த முடியாதுள்ளது. 29 எம்.பிகள் கொல்லப்பட்டனர். பிரதம நீதியரசர் துரத்தப்பட்டுள்ளார். அங்கு தேர்தல் நடத்த முடியாதுள்ளது. இங்கு செப்டம்பர் 21 ஆம் திகதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
இப்பொழுது தான் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியை நீங்கள் பார்க்கிறீர்கள். எனவே எனக்கு தேர்தலில் போட்டியிட முழு உரிமையுள்ளது தானே. தப்பியோடியவர்களை என்ன செய்யலாம்? அவர்களை மறந்து விடாதீர்கள். அவர்களுக்கு இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொடுங்கள்.
நாம் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியுள்ள நிலையில் அதனை மேலும் ஸ்தீரப்படுத்தவே நான் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றேன். எந்தநாளும் கடன்பெற்றுக் கொண்டிருக்க முடியாது. எனவே ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேம்படுத்தி வெளிநாட்டு செலாவணி மிகையை ஏற்படுத்த வேண்டும். வீடு உடைந்து விழுந்தால் என்ன செய்வீர்கள். அதனை வலுவான அடித்தளத்துடன் கட்டியெழுப்ப வேண்டும். அடித்தளத்தில் உள்ள குறைபாடுகளை சீர்செய்ய வேண்டும். அதனால் தான் இப்பணிகளை நிறைவு செய்வதற்காக நான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன். IMF, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களினதும் 17 நாடுகளினதும் ஒத்துழைப்பைப் பெற்றுள்ளோம். அதில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் உள்ளடங்குகின்றன. நிலையான கட்டிடமொன்றை கட்டியெழுப்பவே நான் போட்டியிடுகின்றேன்.
5 வருடங்கள் தான் ஆட்சிப் பொறுப்பைக் கேட்கிறேன். 4 வருடத்தில் அந்தப் பணிகளை நிறைவு செய்வேன். வாழ்க்கைச் செலவைக் குறைப்பது மற்றும் வாழ்க்கைச் செலவு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பது, வரி நிவாரணம் வழங்குவது, அதிகளவில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது, பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றுவது,’உறுமய’, ‘அஸ்வெசும’ என்பவற்றை தொடர்வது என்பனவே எனது இலக்குகளாகும்.
2024 இல் மொத்தத் தேசிய உற்பத்தி அதிகரித்துள்ளது. ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. வாழ்க்கைச் செலவு மேலும் குறையும். 2019 இல் வரியைக் குறைத்ததால் உரம் இல்லாத நிலை ஏற்பட்டது. அந்த நிலைக்கு மீண்டும் செல்ல வேண்டுமா? கடந்த 4 வருடங்களாக தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. அடுத்த வருடம் ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புகளை உருவாக்குவோம். ஏனைய கட்சிகள் தொழில் வழங்குவது தொர்பில் எதுவும் குறிப்பிடவில்லை. 22 ஆம் திகதி முதல் எமது திட்டங்களை செயற்படுத்த இருக்கிறோம்.
மன்னர், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசத்தை முன்னேற்ற வேண்டும். விவசாய நவீனமயமாக்கலை மேற்கொள்ள வேண்டும். மல்வதுஓய ஊடாக யோதவாவிக்கு நீர் அனுப்பிவோம். சுற்றுலாத் துறை முன்னேறினால் இப்பகுதியிலும் சுற்றுலாத்துறை முன்னேறும்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாங்குளம் போன்ற பகுதிகளில் முதலீட்டு வலயங்களை உருவாக்க இருக்கிறோம். காங்கேசன் துறையில் இருந்து ஆரம்பிக்க இருக்கிறோம். இங்கு சூரிய சக்தி உற்பத்தியை முன்னேற்றலாம். சூரிய மின் உற்பத்தியை மேற்கொண்டு இந்தியாவுக்கு விற்பனை செய்யலாம். உங்களின் வருமான வழிகளை அதிகரிக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுவோர் கடன்பட்டுள்ளனர். அவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும். ஏற்றுமதிப் பொருளாதாரமாக எமது பொருளாதாரத்தை மாற்ற வேண்டும்.
இப்பிரதேசத்தில் காணி வழங்குவது தொடர்பில் வனவள திணைக்களம் சார்ந்த பிரச்சினை இருப்பதால் 1985 ஆம் ஆண்டு வரைபடத்தின் பிரகாரம் செயற்பட இருக்கிறோம். அவர்களை அழைத்து உங்கள் காணி பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவோம். வீட்டு உரிமை வழங்க இருக்கிறோம். நடுத்தர வர்க்கத்தினருக்கு வீடுகளை நிர்மாணிக்க சலுகைக் கடன் வழங்குவோம். சஜித் ஆரம்பித்த வீடுகளுக்கும் நிவாரணம் வழங்குவோம். இவ்வாறு பணியாற்ற அநுரவினாலோ சஜித்தினாலே முடியுமா?
இந்த முன்னேற்றத் திட்டத்தை தொடரப் போகிறீர்களா, குழப்பப் போகிறீர்களா?
சிறந்த இலங்கையில் வாழ வேண்டுமா? பங்களாதேஷ் போன்று இருக்க வேண்டுமா? 21 ஆம் திகதி சிலிண்டருக்கு வாக்களிப்போம். இன்றேல் சிலிண்டரும் வெடிக்கும், நாடும் வெடிக்கும்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அமைச்சர் அலி சப்ரி:
”இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஒரு தாயின் பிள்ளைகளைப் போன்று அச்சமின்றி வாழக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க உழைக்கும் ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே. சாதி, மதம், கட்சி வேறுபாடின்றி மிகக் குறுகிய காலத்தில் உங்களுக்காகச் செய்த சில விடயங்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
தற்போது, இந்த நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த செயற்பட்ட அவர், உர மானியம் வழங்குவதுடன் அஸ்வெசும நிவாரணத்தை மும்மடங்கு அதிகரித்தார். உறுமய வேலைத்திட்டத்தின் ஊடாக தற்போது ஒரு இலட்சம் பேருக்கு அவர்களின் காணி உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 19 இலட்சம் பேருக்கு உறுமய காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன. அப்படியானால், உங்களுக்கு காணி உரிமை வேண்டுமானால், நீங்கள் தொடர்ந்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட வேண்டும். அத்துடன், பல இன்னல்களுக்கு மத்தியில் நாட்டை மீட்டெடுத்த அவருக்கு வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என்றார்.
இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்:
”2005 ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு வாக்களிக்காமல் அவரை தோற்கடித்த தவறுக்கு ஆசிரியர் ஒருவர் மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார். நாம் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்தோம். வடக்கு கிழக்கில் 65 – 70 வீதமான மக்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.
லெபனானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அங்கு அரச ஊழியர்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இலங்கையில் 87 வீதமாக இருந்த உணவு பணவீக்கம் 3 வீதமாக குறைந்துள்ளது. ஒரே வழிதான் எமக்குள்ளது. நாட்டை மீட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பது அனைவரினதும் கடமையாகும். 21 ஆம் திகதி புதிய எதிர்பார்ப்புடன் சூரியன் உதிக்கும். ” என்றார்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன்:
”தேசியப் பட்டியில் பாராளுமன்ற உறுப்பினரான ரணில் விக்ரமசிங்க முதல் நாள் பாராளுமன்றத்திற்கு வந்த போது சில ஐ.ம.ச எம்.பிகள் மறுபக்கம் தலையை திருப்பிக் கொண்டார்கள். ஆனால் இன்று அவரை கண்டால் எழுந்து நிற்கிறார்கள்.
வன்னி, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்டிருந்த பல்லாயிரக் கணக்கான ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மேலும் பல ஆயிரம் காணிகள் விடுவிக்கப்பட உள்ளன. காணி ஆவணமற்ற பல காணிகளுக்கு ஆவணம் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி பதவிக்கு வந்த சிறு காலப்பகுதிக்குள் இப்பிரதேசத்தில் 25 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலே உங்கள் காணிகள் மீளக் கிடைக்கும். சஜித் பிரேமதாஸ ஒரு இலட்சம் ரூபா வீதம் கடன் கொடுத்த அந்த மக்கள் நடுவீதியில் உள்ளனர். நாம் சாராயமும் காசும் கொடுத்து கூட்டங்களுக்கு மக்களை திரட்டவில்லை. ஜனாதிபதி செய்த சேவைக்காகவே இங்கு மக்கள் திரண்டுள்ளனர். சஜித் சாரயம் கொடுத்து கூட்டம் சேர்க்கிறார்” என்று தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்:
”நாடு இதே போன்று மேம்பட வேண்டுமா? பழைய நிலைக்கு செல்ல வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இது. அவர் செய்த சேவைக்கு பிரதியுபகாரமாக என்ன செய்யப் போகிறீர்கள். ஜனாதிபதிக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக இன்று மக்கள் இங்கு திரண்டுள்ளனர்.தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை தெரிவு செய்யப்போகிறீர்களா என்று அன்று சிலர் எம்மிடம் கேட்கின்றனர். ஆனால் நாம் துணிந்து ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்தோம்.
போராட்ட காலத்தில் அனைத்திற்கும் வரிசை இருந்தது. பொருளாதார வீழ்ச்சியில் நாடு மூழ்கியிருந்தது. உலகமே ஏற்கும் இராஜதந்திரியான ரணில் விக்ரமசிங்க நாட்டை மீட்டார். இன்று தேர்தல் நடைபெறுகிறது. எந்த சவாலையையும் எதிர்கொள்ளக் கூடிய யதார்த்தபூர்வமான அரசியல்வாதி அவர். இப்பிரதேசத்தில் பெருமளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. பொய்யான புள்ளி விபரங்களை முன்வைத்து எதிரணி பொய் தகவல்களைப் பரப்பி வருகின்றன.” என்றார்.
இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்:
”இந்தப் பிரதேசம் முழு நாட்டுக்கும் சோறு வழங்கும் மிக ஏழ்மையிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் மக்கள் வாழுகின்ற பிரதேசமாகும். வரலாற்றில் முதல் தடவையாக ஒரு கட்சியில் இருந்து கொண்டு கட்சி சார்பற்ற சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளோம். என்னுடன் சுமார் 115 இற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி, இன, மத மற்றும் மொழி பேதமின்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளனர்.
எமது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளான போது எல்லா பொருட்களுக்கும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில் இருந்து எம்மை மீட்டெடுக்க யாரும் வரமாட்டார்களா என்று தேடிக்கொண்டிருந்த நேரம், ஏனையோர் தப்பி ஓடிய போது எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்தவித நிபந்தனையுமின்றி இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்டார். தலைவர் என்பவர் சவாலை ஏற்காது ஓடக்கூடாது. தலைமைத்துவம் என்பது மக்களை துன்பத்தில் இருந்து மீட்டெடுப்பதாகும். பயந்து ஓடியவர்களை தலைவர்கள் என்று கூறுவது பொருத்தமல்ல. பிரச்சினைகளுக்கு அஞ்சாமல் துணிச்சலாக செயற்பட்டு இந்த நாட்டு மக்களை துன்பத்தில் இருந்து ரணில் விக்ரசிங்க மீட்டெடுத்தார். எனவே, அவர் இதுவரை முன்னெடுத்த சிறப்பான வேலைத் திட்டத்தை தொடர்ந்தும் செயற்படுத்த, எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களித்து அவரை மீண்டும் இந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமான்:
”இலங்கை நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஒரு தேர்தலாக இந்த ஜனாதிபதித் தேர்தல் அமைந்துள்ளது. தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். இதுவரை எமது நாட்டின் ஆட்சியாளர்கள் வருமானத்தை விட அதிகமாக செலவுகளை செய்த முறையையே பார்க்கிறோம். அதனால் தான் இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. மேலும் எமது நாட்டு மக்கள் கொள்கை ரீதியில் அன்றி உணர்வு ரீதியாகவே வாக்களிக்கின்றார்கள். ஒரு ஜனாதிபதி வேட்பாளரின் பொருளாதாக் கொள்கை என்ன? அவரின் வேலைத்திட்டம் என்ன? எதிர்கால செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்று சிந்திக்க வேண்டும்.
எவரேனும் கசப்பான உண்மை கூறினால் எமக்குப் பிடிக்காது. இனிப்பான பொய் கூறினால் தான் பிடிக்கும். கடந்த கால பொருளாதார நெருக்கடியின்போது ஆண்கள் தொழில் வாய்ப்புகளை இழந்து பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டனர். பெண்கள் இரண்டு வருடங்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். பிள்ளைகளுக்கு மூன்று வேளை உணவு வழங்க முடியாமல் துன்பப்பட்டனர்.
அந்த நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும். மலையக மக்களுக்கு காணி உரிமை மற்றும் சம்பளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு உட்பட பல்வேறு நலன்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கினார். வவுனியா மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவார். இந்த தேர்தல் ஒரு கட்சிக்கு வாக்களிப்பதல்ல. மாறாக உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவே வாக்களிக்கின்றீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.” என்றார்.
இந்தக் கூட்டத்தில் டெலோ அமைப்பின் செயலாளர் உதயராசா, ஈ.பி.டி.பி கட்சியினர், முஸ்லிம் ஒருங்கிணைப்பாளர் அய்யூப்கான், ஐ.தே.க வவுனியா தொகுதி ஒருங்கிணைப்பாளர் மயூரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமதிபால ஆகியோரும் உரையாற்றினர். இந்தக் கூட்டத்தில் பிரதேச அரசியல் தலைவர்கள், அமைப்பாளர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
ஊடகப் பிரிவு
ரணில் 2024 – இயலும் ஶ்ரீலங்கா
01-09-2024