கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் வலியுறுத்தல்
இலங்கையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் , தனித்துவ அரசியலை விட நல்லிணக்க அரசியலை முன்னெடுப்பதே சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், இழந்த உரிமைகளை வென்றெடுக்கவும் சிறந்த வழிமுறையாக இருக்கும் என்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் சுற்றாடல் அமைச்சருமான கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மறைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் , காலத்தின் கட்டாயம் காரணமாக முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்து, அதன் ஊடாக அரசியல் பயணத்தை தொடங்கினார். எனினும் காலப்போக்கில் தனித்துவ அரசியலை விட நல்லிணக்க அரசியலே சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது, பொருத்தமானது என்பதை உணர்ந்து கொண்டதன் காரணமாக, தேசிய ஐக்கிய முன்னணியை ஆரம்பித்தார். அது மாத்திரமன்றி, தனது வசிய்யத்தாக, இறுதி விருப்பமாக தேசிய ஐக்கிய முன்னணியை முன்மொழிந்த அவர், தான் எதிர்கொண்ட கடைசித்தேர்தலான 2000ம் ஆண்டின் பொதுத்தேர்தலின் போது மறைந்த தலைவர் அஷ்ரப் உள்ளிட்ட அனைவரும் தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் சார்பிலேயே போட்டியிட்டனர். அதன் மூலம் தனித்துவ அடையாளத்துக்குப் பதில் நல்லிணக்க அரசியலே தனது இறுதித்தெரிவு என்பதை தலைவர் அஷ்ரப் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் தலைவரின் மறைவின் பின்னர், நல்லிணக்க அரசியலுக்குப் பதிலாக மீண்டும் தனித்துவ அரசியலும், முஸ்லிம்களை உசுப்பேத்தும் வார்த்தைப் பிரயோகங்களும் நமது தலைவர்கள் என்று சொல்லிக்கொள்கின்றவர்களின் வழிமுறையாகிப்போனது. இனவாதத்தை மூலதனமாகக் கொண்டு இலகுவாக அரசியல் செய்யலாம். ஆனால் அதன் மூலமாக உருவாகும் பாதிப்புகள் இலகுவில் மறையாது. மறுபுறத்தில் இனவாத வழிமுறைகள் மூலம் உரிமைகளை வென்றெடுப்பதற்குப் பதில் இருந்த கொஞ்சநஞ்ச உரிமைகளையும் இழந்தது மாத்திரமன்றி, ஏனைய சமூகங்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பான அதிருப்தி, சந்தேகப் பார்வை என்பவற்றைத்தான் ஏற்படுத்தியது. எங்களுக்கு எந்தப் பலனையும் தரவில்லை. இவ்வாறான நிலையில் தான் ஜனநாயக ஐக்கிய முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தேன். மறைந்த தலைவர் காட்டிய வழியில் அரசியல்செயற்பாடுகளை முன்னகர்த்திச்செல்வதே எனது இலட்சியமாகும்.
அதனை சாத்தியப்படுத்தும் வகையில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சராக, பின்வந்த காலங்களில் முதலமைச்சராக இருந்த காலப்பகுதிகளில் சகல சமூகங்களையும் அரவணைத்து செயற்பட்டுள்ளேன். தொழில்வாய்ப்புகள் , அபிவிருத்திச் செயற்பாடுகளில் எந்தவொரு பாகுபாடும் காட்டியதில்லை. இனமுரண்பாடுகள் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதும் இல்லை. அதன் காரணமாகத் தான் இன்றைக்கு வடமேல் மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சிங்கள சகோதரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள மாகாணத்தில் அனைத்து இன மக்களிடமும் வரவேற்பைப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. எனது அலுவலகத்தின் கதவுகள் அனைத்து இன மக்களுக்கும் எந்தநேரத்திலும் திறந்தே உள்ளன. என்னைத்தேடி வருகின்றவர்களை இனரீதியாக நான் பிரித்துப் பார்ப்பதே இல்லை. அதன் காரணமாகத்தான் வடமேல் மாகாணத்தின் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் என்மேல் அன்பு காட்டுகின்றனர்.
உண்மையில் இவ்வாறாக அனைத்து தரப்புடனும், ஐக்கியம், நல்லிணக்கத்துடன் செயற்படுவதே முஸ்லிம் மக்களின் எதிர்கால நலனுக்குப்பொருத்தமானது. முஸ்லிம்களின் தலைவர்களாக தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அதனை உணர வேண்டும் அவர்கள் வெறுமனே சமூகத்தை உசுப்பேத்தி, ஏனைய சமூகங்களுடன் பகைமையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி விட்டு தங்கள் பாட்டில் சென்றுவிடுவார்கள். அவர்களுக்கு அரசாங்கம் மற்றும் சர்வதேசத்தின் பாதுகாப்பு உள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் இல்லை. கடைசியில் பாதிக்கப்படப்போவது பொதுமக்கள்தான்.
ஆனால் தலைவர்கள் என்போர் தங்கள் மக்களின் பாதுகாப்பு குறித்து சிந்திக்கின்றவர்களாக இருக்க வேண்டும். தலைவர் அஷ்ரப்பிற்கு பின்னர் அவ்வாறான முஸ்லிம் தலைவர் ஒருவரைக் காண முடியவில்லை.
இனி வரும் காலங்களில் மட்டக்களப்பு உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் அவ்வாறான நல்லிணக்க அரசியல் ஒன்றைக் கட்டியெழுப்புவதே எனதுநோக்கமாகும். அதற்காக தீவிரமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளேன். அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துக் கொண்டு இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும், அதன் மூலமாக நமது நாட்டின் ஐக்கியத்தை வலுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் உண்டு. நம் நாட்டின் அரசியல் தலைவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வாறான நல்லிணக்க அரசியல் தொடர்பில் நம்பிக்கை கொண்டவர். அதன் காரணமாகத் தான் அவர் இன்றளவுக்கும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முனைப்புடன் செயற்படுகின்றார். அந்த ஒரே காரணத்துக்காத் தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஆதரிக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல் தனிப்பட்ட நலனை விட நாட்டு நலனை முன்னிறுத்திய ஒரு தேர்தலாகும். கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு கேஸ் சிலிண்டருக்கும் கூட நாட்கணக்கில் வரிசையில் நின்ற நிலையை மாற்றிய ரணில் விக்கிரமசிங்க , மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலே நம் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தினார்.