இனவாதம் மற்றும் மதவாதம் தேவையில்லை: பொருளாதாரத்தைப் பற்றி சிந்திப்போம்

 சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என அனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்

 தனிப்பட்ட விருப்பத்தின்படி அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கான புதிய சட்டம்

 கொரோனா தொற்று சமயத்தில் முஸ்லிங்களின் ஜனாஸாக்களை தகனம் செய்ய அரசுக்கு பரிந்துரைத்த தரப்பினரின் பொறுப்புக்கூறலை ஆராய ஒரு குழு : அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

  • காத்தான்குடியில் நடைபெற்ற மக்கள் பேரணியில் ஜனாதிபதி தெரிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையால் மக்கள் எதிர்கொண்ட சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் பிரகாரம் அடக்கம் செய்வதற்கோ அல்லது தகனம் செய்வதற்கோ அனுமதிக்கும் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், முஸ்லிம்களின் ஜனாசாக்களை தகனம் செய்வதற்கு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்த தரப்பினரின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்படும் எனவும், இதனால் அநீதிக்கு உள்ளான குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

காத்தான்குடி பிரதேசத்தில் இன்று (31) மாலை நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒரு நாடாக முன்னோக்கிச் செல்வதற்கு இனவாதம் மற்றும் மதவாதம் அவசியமில்லை என மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது,

”நாடு வீழ்ச்சியடைந்த போது பொறுப்பை ஏற்க முடியாவிடின் எப்படி தற்பொழுது தலைமைப் பொறுப்பை ஏற்க முடியும்?

மருந்து இல்லாமல்,எரிபொருள் மற்றும் கேஸ் இன்றி, பணம் இன்றி அன்று மக்கள் கஷ்டப்பட்டதை மீண்டும் ஞாபகப்படுத்தத் தேவையில்லை. காத்தான்குடியில் கடைகள் மூடப்பட்டிருந்ததா? திறந்திருந்ததா? என்று உங்களுக்குத் தெரியும். இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அன்று சஜித் பிரேமதாஸவோ அநுரவோ உங்களுக்கு உதவ முன்வரவில்லை. அரசை பொறுப்பேற்று பொருளாதாரத்தை சீரமைக்க அவர்கள் தயாராக வில்லை. ஆனால் பொறுப்பை ஏற்று பொருளாதாரத்தை சீர்செய்து கடைகளை திறக்க நடவடிக்கை எடுத்தேன். தேவையான நேரத்தில் வராமல் இன்று வந்து என்ன பயன்? அவர்களுக்கு போடா.. போடா.. என்று சொல்லி திருப்பி அனுப்புங்கள். கஷ்டத்துடனேனும் நாம் இந்த பொருளாதாரத்தை சீரமைத்துள்ளோம்.
விருப்பமின்றியேனும் கடினமான முடிவுகளை எடுக்க நேரிட்டது. வரியை அதிகரிக்க நேர்ந்தது. IMF ஒப்பந்தத்தின் படி பணம் அச்சிடவோ கடன்பெறவோ முடியாது.
இன்று மக்களின் கைகளில் பணம் இருக்கிறது. அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது. பொருட்களின் விலைகள் குறைந்தன. 370 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி தற்பொழுது 300 ரூபாவாக குறைந்துள்ளது. அடுத்த வருடம் பொருட்களின் விலைகள் குறையும். ரூபாவின் பெறுமதியை தக்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். சஜித்தும் அனுரவும் சொல்வது போல வரியை குறைத்தால் அரசின் வருமானம் குறையும். பொருளாதாரம் வீழ்ச்சியடையும். கடைகளை மூட நேரிடும். மீள திறக்க முடியாத நிலை ஏற்படும். அதனை விரும்புகிறீர்களா?

அதேபோன்று இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
இந்தப் பிரதேசத்தை முன்னேற்ற வேண்டும். இன்று சிங்களப் பிரச்சினை, முஸ்லிம் பிரச்சினை, தமிழ் பிரச்சினை எதுவும் கிடையாது. அதனை ஒரு பக்கமாக வைப்போம். எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பொருளாதாரம் மற்றும் வர்த்தக முன்னேற்றம் குறித்து சிந்திக்க வேண்டும். நாம் எவ்வாறு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என சிந்திக்க வேண்டும். முஸ்லிங்களின் பல பிரச்சினைகளைத் தீர்த்துள்ளேன். நவாஸ் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவேன். அத்தோடு முஸ்லிங்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அன்று அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் விருப்பமானவர்களுக்கு அடக்கம் செய்வதற்கும், தகனம் செய்வதற்கும் அனுமதிக்கும் புதிய சட்டத்தை அலி சப்ரி அமைச்சர் வர்த்தமானியில் வெளியிட இருக்கிறார். பலாத்காரமாக தகனம் செய்யப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கு நாம் நஷ்டஈடு வழங்குவோம். தகனம் தொடர்பில் பரிந்துரை வழங்கியவர்கள் தொடர்பில் ஆராய பாராளுமன்ற குழுவொன்று நியமிக்கப்படும்.

எனக்கு இனவாத ,மதவாத பிரச்சினைகள் அவசியமில்லை. செம்டம்பர் 21 ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இன்றேல் கேஸ் சிலிண்டரும் இல்லை. வர்த்தகமும் இல்லை. கடைகளை மூட நேரிடும்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர் அலி சப்ரி:

”எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு இந்நாட்டை ரணில் விக்ரமசிங்க ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்கள் தீர்மானித்துள்ளனர். இன்று நாம் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் நிறைந்திருக்கிறது. ஏன் நாம் அவருக்கு வாக்களிக்க வேண்டும்? நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போது பொறுப்பை ஏற்குமாறு சஜித்திடம் கோரப்பட்ட போது தனது அரசியல் எதிர்காலத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு சவாலை ஏற்க மறுத்துவிட்டார். அநுர குமார திஸாநாயக்கவும் முன்வரவில்லை. ஆனால் தனியொரு எம்.பி யாக இருந்த எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்ற செயற்பட்டுக்கொண்டிருக்கும் போது அவரின் வீட்டுக்கு தீ வைத்து எரித்தனர். இந்த நாட்டை பங்களாதேஷ் போன்று மாற்றி பலவந்தமாக நாட்டைக் கைப்பற்ற ஒரு குழு முயற்சி செய்தது. ஆனால் அந்த நேரத்தில் எந்தவித அச்சமும் இன்றி, தயக்கமும் இன்றி பொறுப்பேற்று நாட்டை இன்று கட்டியெழுப்பிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பதை பயமின்றி கூற வேண்டும்.

திறைசேரியில் பணமின்றி, சுற்றுலாப் பயணிகள் வருகை தராது அந்நியச் செலாவணிக் கையிருப்பு வீழ்ச்சிகண்டது. ரூபாவின் பெறுமதி குறைந்தது. அவ்வாறு இருந்த நாடு தற்போது மீட்சி கண்டுள்ளது. அனைத்தும் ஒரு நல்ல நிலைமைக்கு வந்துள்ளது. பெரும் நோயில் வீழ்ந்திருந்த நாட்டை குணமாக்கிய ஒரு வைத்தியரே எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. நாம் நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளும்போது நோய் குணமடைவதைக் கண்டும் நோயைக் குணப்படுத்தும் வைத்தியரை மாற்றுவோமா? அவ்வாறு செய்வது சரியா என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சஜித் பிரேமதாஸவின் தந்தையான ரனசிங்க பிரேமதாஸவுக்கு குற்றப்பிரேரணை முன்வைக்கபட்டபோது அவரை ரணில் விக்ரமசிங்க பாதுகாத்தார். அவரது மகன் சஜித் பிரேமதாஸவை அரசியலுக்கு கொண்டு வந்ததும் ரணில் விக்ரமசிங்க தான். அப்படி என்றால் ஏன் சஜித்திற்கு இன்னும் ஐந்து வருடம் பொறுமையாக இருக்க முடியாது. இக்கட்டான காலத்தில் நாட்டைப் பொறுப்பேற்க முடியாது. நாடு படிப்படியாக முன்னேறும்போது அவருக்கு பதவி தேவைப்படுகின்றது. அவருக்கு நாடு அன்றி தனது அரசியல் தான் முக்கியம் என்பது தெளிவாகின்றது. அவரது திட்டங்கள் இந்த பூமியில் செயற்படுத்த முடியாதவையாகும். 1980 கல்வி வெள்ளை அறிக்கையில் ரணில் விக்ரமசிங்க 43 வருடங்களுக்கு முன்னர் குறிப்பிட்டவைகளையே அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த நேரத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை தொடர்ந்து செயற்படுத்த ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும்” என்றார்.

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா:

3 பிரதான வேட்பாளர்களில் அனுபவமும் அறிவும் மிக்கவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒருவரே. காத்தான்குடி உள்ளிட்ட இந்த பிரதேச மக்கள் ஏன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
காத்தான்குடி, ஏறாவூர், கல்குடா, வாழைச்சேனை மக்களுக்கு இன்னும் பல காரணங்கள் இருக்கும். அதில் முக்கியமானது நிலப் பற்றாக்குறையாகும். அந்தப் பிரச்சினையைத் தீர்க்க அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறோம் கிழக்கு மாகாணத்தில் பிரத்தியேக பல்கலைக்கழகமொன்று கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதனை மூடினார்கள். அதனை ஜனாதிபதி மீள திறந்து எமது மக்கள் அதன் மூலம் பயன்பெற நடவடிக்கை எடுத்தார். அதுமாத்திரமன்றி காத்தாக்குடி தள வைத்தியசாலையை தரமுயர்த்த பல காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. ஜனாதிபதி அதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

குருக்கல்மடுவில் ஹஜ் கடமைக்கு சென்று திரும்பிவந்த முஸ்லிங்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களின் சடலங்கள் இன்று கூட கிடைக்கவில்லை. அவர்களின் குடும்பங்களுக்கு எந்த நஷ்ட ஈடும் வழங்கப்படவில்லை. நீதிபதி நவாஸ் குழுவின் பரிந்துரைப்படி குடும்பங்களுக்கு கொடுப்பனவு வழங்குவதாக ஜனாதிபதி தனது விஞ்ஞாபனத்தில் உறுதியளித்துள்ளார். அதற்காக காத்தான்குடி மக்கள் தமது வாக்குகளை வழங்க கடமைப்பட்டுள்ளனர்.

புரையோடிப் போன பல பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வு அளித்துள்ளார். அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும். அவர் இளைஞரைப் போன்று செயல்வீரராக பணியாற்றுகிறார். மக்களின் எதிர்காலம் பற்றியே எப்பொழுதும் சிந்திக்கிறார்.எனவே அவரை நாம் வெல்லவைக்க வேண்டும்.

வடமேல் மாகாண ஆளுநர் ஹாபீஸ் நசீர் அஹமட்

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி தற்போதும் உறுதியாகியுள்ளது. ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன் போன்றவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் வரவிடாமல் முஸ்லீம் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். முன்னைய தேர்தல்களிலும் இவர்கள் மக்களை இவ்வாறுதான் வழி நடத்தினர்.

இவ்வாறு நான்கு தடவைகள் இவர்கள் முஸ்லிம் மக்களை திசைத்திருப்பியுள்ளனர். ஆனால் இவர்கள் ஆதரவளிக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதில்லை. எனவே இம்முறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதியாகியுள்ளது. ஜனாதிபதி மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய வரலாற்றை கொண்டுள்ளார்.

நாட்டில் நெருக்கடி ஏற்பட்டிருந்த காலத்தில் முஸ்லிம்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அந்த நிலையிலிருந்து முஸ்லிம் மக்களைப் பாதுகாக்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தார். இன்று முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சுதந்திரம் இருக்கிறது. அதற்கு நன்றிக்கடன் செய்யும் முகமாக ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டும். ” என்றார்.