- நாட்டின் பொருளாதாரத்துடன் மீண்டும் விளையாட முடியாது
- கஷ்டப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை அழிக்காதீர்கள்
– குருணாகலில் ஜனாதிபதி தெரிவிப்பு
இந்த நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை தவறாக வழிநடத்துவதாலேயே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்துடன் மீண்டும் விளையாட முடியாது எனவும், பொய்யான வாக்குறுதிகள் ஊடாக நாடு அழிவடைவதை அனுமதிக்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
குருநாகலில் இன்று (30) நடைபெற்ற ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் விசேட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தை ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமானஅசங்க நவரத்ன ஏற்பாடு செய்திருந்ததுடன், மாநாட்டுக்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:
ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் இந்த மாநாட்டிற்கு என்னை அழைத்தமைக்கு உங்கள் அனைவருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்ரீலங்கா மக்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் விஜய குமாரதுங்கவும் நானும் 13 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்து செயற்பட்டோம். அதன்போது அவர் தனது உயிரை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. ஸ்ரீலங்கா மக்கள் கட்சியுடன் இணைந்து செயற்படும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பாராளுமன்றத்தில் அந்த உறவை நாங்கள் கொண்டிருந்தோம்.
2022 ஜூலையில் நான் அரசாங்கத்தை பொறுப்பேற்று ஜனாதிபதியாக பதவியேற்ற போது அசங்க நவரத்ன உட்பட ஸ்ரீலங்கா மக்கள் கட்சி வழங்கிய ஆதரவை நான் குறிப்பாக இங்கு நினைவுகூருகின்றேன். மிகவும் கடினமான நேரத்தில் நாட்டைப் பொறுப்பேற்றோம்.
எப்படியோ அந்த சவால்களை ஏற்று இரண்டு வருடங்கள் கழித்து நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை கொண்டு வந்தோம். அதன் போது விருப்பமில்லாமல் இருந்தாலும், வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்தக் காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி முன்னேறுவதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைத்தது.
சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் ஏற்படுத்திய வேலைத்திட்டத்தின் காரணமாகவே அந்தச் சலுகைகளை வழங்க முடிந்தது. எனவே இந்த திட்டத்தை தொடர வேண்டும். இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காகவே இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறேன். நாம் இந்த நாட்டை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும். எங்களால் எப்போதும் இப்படியே இருக்க முடியாது. நாம் முன்னேற வேண்டுமானால், ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு மாற வேண்டும். கட்சி அரசியலை மறந்து இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக செயற்படுகிறோம் என்பதைக் கூற வேண்டும்.
இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ளன. யானை வேலிக்கு பொறுப்பான உத்தியோகத்தர்களின் சேவையை பாதுகாப்பதற்காக நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். மேலும், விவசாய நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும். விவசாயத்தை அபிவிருத்தி செய்யாமல் இந்த நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது. 80% வறுமை கிராமங்களிலேயே உள்ளது. எனவே கிராமத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். விவசாயத்தை மேம்படுத்தி கிராமத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். தற்போது விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம், தேர்தலுக்கு பிறகு திட்டத்தை செயல்படுத்துவோம்.
அத்துடன் இப்பிரதேசங்களில் நெற்பயிர்ச் செய்கை, தென்னைச் செய்கை, கறுவா, கொக்கோ பயிர்ச்செய்கை போன்றவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இது பொறுப்புடன் செயல்படுத்தப்படும் பொருளாதாரத் திட்டமாகும். இந்த பொறிமுறை மூலம்தான் நாடு அபிவிருத்தி அடைய முடியும்.
மேலும், குருணாகலை பாரிய பொருளாதார நகரமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். இந்த அபிவிருத்தியை ஒவ்வொரு பிரதேசத்திலும் கொண்டு செல்வதற்காக நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். இன்று நாட்டின் பொருளாதாரத்துடன் விளையாட முடியாது. நாட்டின் பொருளாதாரம் குறித்து பொய்கூறி மக்களை ஏமாற்ற முடியாது. இதை பல்வேறு கட்சிகள் செய்தன. அதனால்தான் இந்த நிலைக்கு வந்தோம். ஆதலால், யாருக்கும் விரல் நீட்டிக் கொண்டிருக்காமல், நாம் முன்னோக்கிச் செல்வோம் என்று கூற விரும்புகிறேன்.
மேலும், கல்வி மற்றும்பாடசாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும். குருணாகல் சிறந்த கல்வி வளர்ச்சியைக் கொண்ட பிரதேசமாகும். இந்த மாவட்டத்தில் கல்வியை நவீனமயமாக்க வேண்டும். இலங்கையில் “ஸ்மார்ட்” வகுப்பறைகளுடன் கூடிய முதலாவது பாடசாலையை குருணாகலில் ஆரம்பித்தோம். அடுத்த ஆண்டு முதல் இந்தப் பாடசாலைகளை முறையாக நவீனமயமாக்கத் தொடங்குவோம். அதற்கென தனியாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்த பத்தாண்டுகளில் பாடசாலை மறுசீரமைப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
2022 ஆம் ஆண்டை விட தற்போது பொருட்களின் விலை குறைந்துள்ளது. வரியை குறைக்க எங்களுக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் பொருளாதாரம் வலுப்பெற்றதால் ரூபாவின் பெறுமதி உயர்ந்தது. இதனால், பொருட்களின் விலை குறைந்துள்ளது. இப்படியே தொடர வேண்டும்
ஏனைய வேட்பாளர்கள் வரியைக் குறைப்போம் என்கிறார்கள். வரிகளை குறைத்து நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாப்பது எப்படி என்று கேட்க விரும்புகிறேன். சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும்.
சஜித் பிரேமதாசவின் கொள்கைப் பிரகடனத்தில் டிஜிட்டல் கல்வி கொண்டுவரப்படும் என்றும், ஒவ்வொரு பாடசாலையிலும் “ஸ்மார்ட்“ வகுப்பறைகள் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் இதைச் செய்ய உலகில் உள்ள 10,000 கோடீஸ்வரர்களை தேடிக்கொள்வதாக குறிப்பிடுகின்றார்கள். ஒவ்வொரு கோடீஸ்வரருக்கும் ஒரு வகுப்பறை கொடுக்கப்படும் என்கிறார்கள். இவற்றைச் செய்ய முடியுமா?
இவ்வாறான பொய்யான அறிக்கைகளை வெளியிடும் ஒருவர் ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவரா? அமைச்சர் பதவிக்கேனும் தகுதியானவரா? என நான் கேட்கின்றேன். இப்படி பொய் சொல்வது நல்லதல்ல. இந்த விடயமே இந்தப் பதவிக்கு சஜித் பிரேமதாச பொருத்தமானவர் அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது. மக்களிடம் பொய்கூறியது போதும். ஏமாற்றியது போதும். பொய் சொல்லி இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு கடந்த இரண்டு வருடங்களாக நாம் துன்பப்பட்டோம். எனவே, நாம் பழைய நிலைக்குத் திரும்பக் கூடாது. வலுவான பொருளாதாரத்துடன் முன்னேற அனைவரையும் அழைக்கிறேன்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன;
ஸ்ரீலங்கா மக்கள் கட்சிக்கு புகழ்மிக்க வரலாறு உண்டு. 1988-89 காலப்பகுதியில் விஜய குமாரதுங்க கிருலப்பனையில் கொல்லப்பட்டார். கட்சித் தலைவர்களைக் கொன்றாலும் கட்சிகளைக் அழிக்க முடியாது . முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட தலைவர்கள் இந்தக் கட்சியினை முன் கொண்டுவந்தனர்.
உலகில் 06 நாடுகள் இன்று வங்குரோத்தாகிவிட்டன. அவற்றுள் இலங்கை மாத்திரம் பொருளாதார ரீதியாக விரைவாக மீண்டுள்ளது. இலங்கை வரலாற்றில் பல்வேறு காரணங்களுக்காக தலைவர்கள் கொல்லப்பட்டனர். சிங்கள, தமிழ் முஸ்லிம் தலைவர்கள் கொல்லப்பட்டனர். அதனால் எமது நாடு அழிந்தது. நாடு வளர்ச்சி அடையவில்லை. நாட்டின் பொருளாதாரம் சரிந்தது. நாட்டைக் காப்பாற்ற ஒரு தலைவர் இல்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன் வந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாடுபட்டார். மேலும், மீண்டும் பொருளாதார சரிவை தடுக்க புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஊழல் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெண்கள் வலுவூட்டும் சட்டம், பொருளாதார பரிமாற்றச் சட்டம் ஆகியவையும் கொண்டு வரப்பட்டுள்ளன. இப்போது சம்பிரதாயமாக பொய்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை மேடைகளில் கூற முடியாது. ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, இவை நிறைவேற்றப்படாவிட்டால், நீதிமன்றத்தை நாடலாம். 2001ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தையே இன்று ஏனைய அரசியல் கட்சிகள் முன்வைக்கின்றன” என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன:
நீண்ட காலம் பயணித்து, அரசியல் போக்கை மாற்றி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய தலைவருக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா மக்கள் கட்சி தீர்மானித்தது. இரண்டு வருடங்களில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்த நாட்டின் தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என எமது கட்சி தீர்மானித்தது. 1988-89 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் 149 தலைவர்களைக் கொன்றது. மீண்டும் அந்த இரத்தக் களரி குழுக்கள் பொருளாதாரத்தை அழிக்க முன் வந்துள்ளன. அதை அனுமதிக்க மாட்டோம். எனவே, சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் வகையில் எமது கட்சியினர் செயற்பட்டு வருகின்றனர்” என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில்:
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முதல் தடவையாக ஆதரவளிக்க தீர்மானித்தோம். நாம் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ சிறந்த பொருளாதாரம் கொண்ட நாடு வேண்டும். ஒன்றன் பின் ஒன்றாக கனவு காண்பதன் மூலம் வலுவான பொருளாதாரம் கொண்ட நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இன்று பங்களாதேஷுக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 இல் முன்வராவிட்டால், போராட்டக்காரர்கள் எமது பாராளுமன்றத்தை தாக்கி நாட்டை அராஜக நிலைக்குத் தள்ளுவார்கள். மற்றொரு பங்களாதேஷாக இருக்க வேண்டிய நாட்டை பொருளாதார ரீதியாக பலப்படுத்தியதற்காக ஜனாதிபதிக்கு எமது நன்றியை தெரிவிக்க வேண்டும். எனவே இம்முறை சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களித்து மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வோம்” என்றார்.
இராஜாங்க அமைச்சர்களான டி.பி.ஹேரத், சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி தவிசாளர் அல்பிரட் ராமநாயக்க, முன்னாள் அமைச்சர்களான அகிலவிராஜ் காரியவசம், எஸ்.பி.நாவின்ன உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.