எரிப்பதா நல்லடக்கம் செய்வதா என்கின்ற பிரச்சினையின் போது நாம் நியாயத்தின் பக்கமே இருந்தோம். WHO நிறுவனமும் நல்லடக்கத்திற்கான அனுமதி வழங்கியிருந்த போதும், அரசாங்கம் திருட்டுக் குழு ஒன்றை நியமித்து முஸ்லிம் மக்களுடைய கலாச்சார மற்றும் மார்க்க உரிமையை இல்லாது செய்திருந்தபோது, நாம் அன்று ராஜபக்சக்களோடு இல்லாமல், மக்களோடு இருந்தோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று கோட் அணிந்து தலைவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் இனவாதம் இல்லை என்று சொன்னாலும், அவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள். முஸ்லிம் சமூகம் இந்த இக்கட்டான பிரச்சினைக்கு முகம் கொடுத்திருந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் மௌனமாக இருந்தார்கள், ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கிறங்கியது. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக இந்த அநீதமான செயற்பாட்டை மேற்கொண்டவர்கள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் வெற்றிப் பேரணி கூட்டத் தொடரின் 22 ஆவது கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (27) இரவு அட்டாளச்சேனையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
வறுமையை ஒழிக்கும் செயற்பாட்டிற்காக அடியெடுத்து வைத்து, சமூர்த்தி, ஜனசவிய, கெமிதிரிய மற்றும் அஸ்வெசும போன்றவற்றில் காணப்படுகின்ற சிறந்த விடயங்களை உள்ளடக்கிய புதிய முறை ஒன்றை கையாண்டு, 24 மாதங்களுக்குள் மாதம் ஒன்றுக்கு தலா 20000 ரூபா வீதம் வறுமையான குடும்பங்களுக்கு வழங்கி, இரண்டு வருடங்களுக்குள் வறுமையை போக்கும் செயற்த்திட்டங்களை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகளுக்கு சிறந்த தரத்திலான 50 கிலோ கிராம் உர மூடை ஒன்றை 5000 ரூபாவிற்கு வழங்குவதோடு சாதாரண விலையில் இரசாயன பொருட்களை, திரவ இடு பொருட்களை வழங்குவதோடு, கருப்புச்சந்தையாளர்களுக்கு இடமளிக்காது நெல்லுக்கான நிர்ணய விலையையும் பெற்றுத் தருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விவசாயிகளையும், நுகர்வோர்களையும் பாதுகாக்கின்ற வகையில் அரிசி மாபியாவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, விவசாயிகளின் விவசாய கடன்களை இரத்து செய்வோம். நட்புவட்டார நண்பர்களின் கடன்களை அரசாங்கத்திற்கு இரத்துச் செய்ய முடியும் என்றால், விவசாயிகளின் விவசாய கடன்களையும் இரத்து செய்ய அரசாங்கத்தினால் முடியும் என்று சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், அந்த செல்வந்தர்களின் இரத்து செய்யப்பட்ட கடன்களை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.