புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் திட்டமும், நோக்கும் நாளை முன்வைக்கப்படும்!

அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்கும் மற்றும் இளைஞர்களுக்கு பாதுகாப்பான இலங்கையை உருவாக்கும் திட்டங்கள் அதில் உள்ளடங்கியுள்ளது.


ஜே.வி.பி.யின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி, வரி வருமானம் குறைக்கப்பட்டால், 200 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான அரச வருமான இழப்பு ஏற்படும்.


அரச வருமானத்தைக் குறைத்து, செலவினங்களை அதிகரிப்பது எவ்வாறு என்ற கணிதச் சிக்கலை அவர்கள் மக்கள் முன்பாக தீர்க்க வேண்டும்.


தொங்கு பாலம் வெட்டப்பட்டால் நாடு முழுமையாக ஆற்றில் விழும்!
– ஜனாதிபதி மாவனல்லையில் தெரிவிப்பு

அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வைகொண்ட புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் திட்டம் உள்ளடக்கிய தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஓகஸ்ட் 29 வியாழக்கிழமை நாட்டுக்கு முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


இளைஞர்களுக்கு பாதுகாப்பான இலங்கையை உருவாக்கும் வேலைத்திட்டம் அதில் உள்ளடங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


மாவனல்லை பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.


இந்த மக்கள் பேரணியில் மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன், அவர்கள் ஜனாதிபதியை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் மாவனல்லை அளுத்நுவர பிரிவின் அமைப்பாளர் பிரசன்ன இந்திக்க உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் குழு ஜனாதிபதிக்கு தமது ஆதரவை தெரிவிக்க இணைந்து கொண்டமையும் விசேட அம்சமாகும்.


அத்துடன், ஓய்வுபெற்ற இராணுவக் குழுமத்தின் மாவனல்லை தொகுதி அமைப்பாளர் உள்ளிட்ட குழுவினரும் மேடைக்கு வருகை தந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத் திட்டத்திற்கு தமது ஆதரவைத் தெரிவித்ததுடன், நாட்டின் தொழில்துறையை வலுவூட்டும் ஜனாதிபதியின் பணிக்காகவும் ஜனாதிபதியை பாராட்டினர்.


இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள தொங்கு பாலத்தின் பயணம் தொடர வேண்டும் எனவும், தொங்கு பாலம் வெட்டப்பட்டால் ஆற்றில் விழ நேரிடும் என்ற உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.


ஜே.வி.பியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி, வரி வருமானம் குறைக்கப்பட்டால், அரச வருமானம் 200 பில்லியனுக்கு மேல் குறையும் என்றும், அவர்கள் கூறுவது போல், பொருட்களின் விலையை குறைக்கவும் முடியாது என்றும், அரச வருமானத்தைக் குறைத்து, செலவினங்களை அதிகரித்து பொருளாதாரத்தை எவ்வாறு பேணுவது என்ற கணிதப் பிரச்சினையை அவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:
”இதற்கு முன்னர் மாவனல்லையில் ஐ.தே.க மேடைகளில் தான் உரையாற்றியுள்ளேன். இன்று சகலருடனும் பேச வந்துள்ளேன். நாடு நெருக்கடியான சூழலில் இருக்கையில் கட்சியை மறந்து நாட்டைப் பற்றி சிந்தித்து செயற்படுமாறு எமது தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தன எமக்கு கற்பித்துள்ளார்.

1971 இல் ஜே.வி.பி கலவரத்தின் போது ஜனநாயகத்தைப் பாதுகாக்க அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்குவதாக ஐ.தே.க தலைவர் அறிவித்தார். ஜே.ஆர் ஜெயவர்தனின் புதல்வர் கைதாகியிருந்தார். அந்தப் பிரச்சினையை பின்னர் தீர்க்கலாம் என அவர் தெரிவித்தார். 1989 ஜே.வி.பி கலவரத்தின் போது சிறிமாவோ அம்மையார், பிரேமதாஸவைச் சந்தித்து ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்தார்.

பிரேமதாஸ கொல்லப்பட்ட போது நாட்டை ஸ்தீரப்படுத்த உங்கள் தரப்பில் இருந்து ஜனாதிபதி ஒருவரை நியமிக்குமாறு சிறிமாவோ அம்மையார் கோரினார். அன்று நாடு நெருக்கடியாக இருந்த போது கட்சிகள் அவ்வாறு இணைந்து செயற்பட்டன. இன்று எம்முடன் பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என அனைத்துக் கட்சிகளும் உள்ளன. ஜே.ஆர்.ஜெயவர்தன, ஆர்.பிரேமதாஸ ஆகியோரை பின்பற்றினால் கட்சி அரசியலுக்கு அப்பால் நாடு குறித்து சிந்தித்து செயற்படலாம்.


நான் வேறொரு கட்சியில் இணைந்துள்ளதாக யாராவது சொன்னால் அது தவறு. ஏனைய கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று சொல்வேன். எதிர்க்கட்சித் தலைவர் தான் மாற்று பிரதமர். ஐ.தே.க அங்கத்தவராக இருந்திருந்தால் 2 வருடங்களுக்கு முன்னர் பிரதமர் பொறுப்பை சஜித் ஏற்றிருக்க வேண்டும். அவர் ஏற்கவில்லை. ஏற்காவிட்டால் அவர் ஐ.தே.கவை சேர்ந்தவரல்ல.


அன்று கேஸ், எரிபொருள், மருந்து வரிசை இருந்தது. வன்முறை வெடித்தது. அனைவரும் கஷ்டப்பட்டனர். எத்தனை மணிநேரம் வரிசையில் இருந்தீர்கள்? அனைவரும் வழங்கிய ஒத்துழைப்பினால் நாம் இணைந்து நாட்டை மீட்டோம். நாம் பொருளாதார ஸ்தீர நிலையை நோக்கிச் செல்கிறோம். வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளது. அந்த சுமையை மேலும் குறைக்க எதிர்பார்க்கிறோம்.

வருமானத்தை அதிகரிக்க வேண்டும். புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். ஏற்றுமதி வருமானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். எதிர்காலம் குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும்.


நாம் இதுவரை பயணித்த பாதையில் தொடர்ந்து செல்ல வேண்டும். அந்தப் பாதையில் இருந்து விலக முடியாது. வரி அறிவிடுவதை நிறுத்துவதாக சிலர் செல்கின்றனர். தொங்கு பாலத்தை வெட்டி விட்டுச் சென்றால், ஆற்றில் தான் விழ நேரிடும்.

ஜே.வி.பி.யின் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் குறைந்த பட்சம் 200 பில்லியனுக்கு மேல் வருமானம் குறையும். வரி வருமானம் குறைந்தால், எப்படி செலவுகளை அதிகரிக்க முடியும். அந்தப் பொருளாதாரக் கணக்கு தெரியாமல் தொங்கு பாலத்தின் இரு பக்கங்களையும் வெட்டி விடத் தயாராகிறார்கள். 232 பக்கங்களுடன் கூடிய விஞ்ஞாபனத்தை நேற்று வாசித்தேன்.

அதனை அனைவரும் படிக்க வேண்டும். அதற்கு ஓரிரு மாதங்கள் செல்லும். ஆனால் 21 ஆம் திகதி வாக்குச் சாவடிக்குச் சென்று கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். தொங்கு பாலத்தை கைவிடாமல் தான் நாம் இந்தப் பயணத்தை செல்ல வேண்டும்.


பொருளாதார ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தி, அதன் பயனை உங்களுக்கு வழங்க வேண்டும். அதனால் தான் 5 வருடங்களில் பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தி ஏற்றுமதி வருமானத்தை உயர்த்தி, அடுத்த வருடம் முதல் உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்போம். தொழில் வாய்ப்புகளை உருவாக்குவோம். வருமானம் அதிகரிக்கும் போது வரியைக் குறைப்போம்.

உறுமய, அஸ்வெசும என்பவற்றை தொடர்வோம். இது தான் எனது திட்டம். பொருளாதார முகாமைத்துவத்தை ஏற்படுத்தி வருமானத்தை அதிகரிப்பதோடு பொருட்களின் விலைகளைக் குறைக்கலாம். அடுத்த வருடம் முதல் படிப்படியாக வரியை குறைப்பது குறித்து சிந்திக்க முடியும். தற்பொழுது அதனை செய்ய முடியாது. பருப்பு, சீனி, எரிபொருள் விலைகள் தற்பொழுது குறைந்துள்ளன.

அவற்றை மேலும் குறைக்க வேண்டும். புதிய வருமான வழிகள், பொருளாதார முன்னேற்றத்துடன் முதலீடுகள் அதிகரித்தால் வரிச் சுமையைக் குறைக்கலாம். சுற்றுலா பயணிகள் அதிகரித்து, கைத்தொழில்கள் உருவாகும்போது வருமானம் உயரும். விவசாய நவீன மயமாக்கலுடன் பொருளாதாரம் உயரும்.


பலமான பொருளாதார அடித்தளமொன்று ஏற்படுத்தியுள்ளோம். நிதி சார்ந்த 4 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஐ.ம.ச இன்றும் தமது கொள்கை என்ன என்று தெரியாதுள்ளது. ஒருபக்கம் ஹர்ஷ தனது கொள்கை என்று ஒன்றை சொல்கிறார். கொடஹேவா வேறொன்றை சொல்கிறார். வியாழக்கிழமை எமது முழுமையான தொலைநோக்குடைய திட்டத்தையும் கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக அறிவிப்போம். புதிய இலங்கையொன்றை உருவாக்குவோம். உங்களுக்கும் புதிய இலங்கை ஒன்றை உருவாக்க வேண்டும். பொருளாதார முறையை மாற்ற வேண்டும். இளைஞர் கையில் பணம் இருக்க வேண்டும். நாம் இணைந்து முன்னோக்கிச் செல்வோம்.


விவசாய நவீனமயமாக்கலை டட்லி சேனாநாயக்கவிடம் இருந்து தான் கற்றேன். அதனை ஆரம்பிக்க வேண்டும். உங்கள் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும். இருப்பதை பாதுகாக்கப் போகிறீர்களா? இருப்பதை அழித்துக் கொள்ளப் போகிறீர்களா? 21 ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லையெனில், கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் எனக்கு குறை சொல்லாதீர்கள். ” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.


அமைச்சர் அலி சப்ரி;
”தேர்தலை நடத்தினால் வெற்றிகொள்வது பொருட்டல்ல. ஆனால் அதன் பின்னர் நாட்டை நடத்திச் செல்வதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு 69 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. அவரால் நெருக்கடிகளின் உக்கிரத்துக்கு மத்தியில் நாட்டை கையாள முடியாமல் போனது.
நிதி அமைச்சைப் பாதுகாக்க கூட அன்று எவரும் இருக்கவில்லை.

என்னை ஏற்றுக்கொள்ளுமாறு அப்போதைய ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். ஐ.எம்.எப் உடன் நான் பேசிய போது அனைவரும் ஒற்றுமையாக வாருங்கள் என்று கூறினர். அப்போது எதிர்கட்சித் தலைவரிடம் ஒன்றுபட்டு்ச் செயற்பட முன்வருமாறு அழைப்பு விடுத்தோம். தாலி கட்டவும் கழுத்து இருக்க வேண்டும் என்பது போல நாட்டை முதலில் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பதே எமது நிலைப்பாடாக இருந்தது.


எதிர்கட்சியினரிடம் உரிய அதிகாரிகளை அனுப்பி நாட்டின் பொருளாதார நிலைமை பற்றி அறிவித்தோம். அவர்கள் அந்த நெருக்கடிக்கு மத்தியில் தமது அரசியல் நோக்கம் பற்றி சிந்தித்து எதிர்க்கட்சியினர் நாட்டைப் பொறுப்பேற்க தயங்கினர். அதற்கு மாற்று பதிலாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தேடினோம். நிபந்தனையின்றி நாட்டை ஏற்றுக்கொண்ட அவர் அன்றிருந்த பிரச்சினைகள் அனைத்தையும் துடைத்தெறிந்துள்ளார்.


இன்று பங்களாதேஷில் நடத்ததை பாருங்கள், மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். வீதிகளில் மக்கள் கொல்லப்படுகின்றனர். அப்படியொரு நாடு எமக்கு வேண்டாம் என்பதாலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று நினைக்கிறோம். இன, மத பேதமின்றி அனைவரையும் ஒன்றிணைந்துக் கொண்டுச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஒரே தலைவரும் அவர் மட்டுமே.


நாட்டு மக்கள் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். கிரேக்கத்திலும் இதுபோன்றே நடந்தது. அந்த நாட்டு மக்கள் சமவுடமை வாதிகளை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். அதன் பலனாக இரண்டே வருடங்களில் அந்த நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்தடைந்தது. எனவே நமது நாட்டு மக்களும் சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுகின்ற மாற்றத்தை எதிர்பார்க்காமல் இருக்கும் இடத்திலிருந்து முன்னேறிச் செல்லும் வகையிலான மாற்றத்தையே எதிர்பார்க்க வேண்டும்.” என்றார்.


இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய:


”2022 பொருளாதார நெருக்கடியின் போது நாம் வெளிநாடுகளுக்கு சென்ற போது என்ன உதவி வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால் இரண்டரை வருடத்தில் எவ்வாறு மீட்சி பெற்றீர்கள் என்று வினவுகிறார்கள். சிறந்த தலைமைத்துவம் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திர உறவு மேம்படுத்தப்பட்டமையே அதற்குக் காரணம். கடந்த காலத்தில் சில நாடுகளுடனான உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் நாம் அந்த நிலையை கடந்த 2 வருடங்களில் மாற்றியமைத்தோம். அதன் பயனாக பல உதவிகளைப் பெறவும் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளவும் முடிந்தது” என்றார்.


இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிடிய:
”தேசத்தின் வெற்றிக்காக இன்று பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடியுள்ளனர். இந்த நாட்டை மீட்டவர் ரணில் விக்ரமசிங்கதான் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. பாரிய நெருக்கடியின் போது ரணில் விக்ரமசிங்க பொறுப்பை ஏற்றிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்று மக்களிடம் கேட்டேன். நாம் செத்துப் போயிருப்போம் என்று மூதாட்டி ஒருவர் சொன்னார். அதுதான் பலரதும் கருத்தாகும். அவரால் தான் இன்று மக்கள் வாழ்கின்றனர்.
அவருக்கு மாற்றீடு கிடையாது. உங்களுடன் ஒப்பிடக் கூடிய சர்வதேச சமூகத்துடன் பேசக் கூடிய எந்த வேட்பாளரும் இந்த 39 வேட்பாளர்களிடையே கிடையாது. எட்டப்பட்டுள்ள உடன்படிக்கைகளை மாற்ற முடியாது என்பதை ஐ.எம்.எப் உம் தெரிவித்துள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து கேகாலையில் பெரு வெற்றி பெற்றுத் தர தயாராக உள்ளனர்” என்றார்.


இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்:
”பல வருடங்களாக மேற்கொள்ளப்படாத கிராமிய அபிவிருத்தி ஆரம்பிக்கப்பட்டது. எமது இளைஞர் யுவதிகளுக்காக பின்னவலயில் பல்கலைக்கழகமொன்றை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். பல்கலைக்கழகம் செல்லாத மாணவர்களுக்காக கேகாலை மாவட்டத்திற்கு பல்கலைக்கழகம் வழங்கியுள்ளீர்கள். இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம். கணிப்பீடுகளின் படி அதிக வாக்குகளினால் வெல்லும் இரு மாவட்டங்களில் கேகாலையும் பதுளையும் அடங்கும். வாய்ப்பேச்சு வீரர்களைத் தெரிவு செய்யப் போகிறீர்களா? செயல்வீரரை தெரிவு செய்யப் போகிறீர்களா? மக்கள் தீர்மானிக்க வேண்டும்.” என்றார்.


சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசானாயக்க:
”நாம் மீண்டும் 2022 நிலைக்கு தள்ளப்படமாட்டோம். தொலைநோக்குடன் ரணில் விக்ரமசிங்க நாட்டை முன்னேற்றி வருகிறார். பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று சொல்லமாட்டோம். ஆனால் ஒவ்வொரு பிரச்சினைக்கும் அவர் தீர்வு வழங்குவார். சுதந்திரக் கட்சியும் ஐ.தே.கவும் ஒரே மேடையில் இருக்க முடியுமா? அந்த ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கக் கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க தான். அனுபவம் உள்ள தலைவரிடமே நாட்டை கையளிக்க வேண்டும்.
2 வருடத்தில் ரணில் விக்ரமசிங்க சாதித்துக் காட்டியுள்ளார். அவர் பொறுப்பொன்று ஏற்றால் செய்து காட்டுவார். நாடு முகங்கொடுத்த பிரச்சினைகளை அவர் ஒவ்வொன்றாக தீர்த்துள்ளார். அரச துறையில் தொழில் வழங்க முடியாது. ஆனால் அவர் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.


ஐ.ம.ச பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்:
”சவாலுக்குப் பயந்த தலைவர்களையா அல்லது சவாலை ஏற்ற தலைவரையாக எதிர்வரும் தேர்தலில் தெரிவு செய்யப் போகிறீர்கள். அடுத்த முறை மீண்டும் பாராளுமன்றத்திற்கு செல்வதற்காகவும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காகவும் அன்று நாட்டை ஏற்க சிலர் பின்வாங்கினார்கள். ஆனால் இன்று ஆட்சியை தங்களிடம் தருமாறு கேட்கிறார்கள். நாட்டை பொறுப்பேற்றால் முழுநாடும் இருளில் மூழ்கும் என்றும் டொலரின் பெறுமதி 2 ஆயிரம் ரூபாவாகும் என்றும் எதிரணி அன்று கூறியது. ஆனால் நாட்டை முன்னேற்றும் எம்மிடம் சிறந்த குழுவிருக்கிறது என்று இன்று சொல்கிறார்கள். பங்களாதேஷத்தைப் போன்று இலங்கை மாறுவதை காண விரும்புகிறீர்களா? இந்த தேர்தலில் தவறான முடிவை எடுத்து விடாதீர்கள். அவ்வாறு செய்தால் 6 மாதத்தில் மீண்டும் வீதிக்கு வர நேரிடும்.
இனவாதம், மதவாதமில்லாத தலைவரைத் தெரிவுசெய்ய கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். ஐ.எம்.எப் ஒப்பந்தத்தை மாற்றுவதாக எதிரணி பொய்யாக கூறிவருகின்றனர். ஐ.எம்.எப் உடன் பகிரங்கமாக கலந்துரையாட முன்வருமாறு எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதி சவால் விடுத்துள்ளார். அவர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள். அதனால் மக்களை இரவில் விழுந்த குழியில் பகலில் விழ வேண்டாம் என்று கோருகிறேன்” என்றார்.


பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால:
“இரண்டு வருடங்களுக்கு முன்பு நாட்டிலிருந்த நிலையை மக்கள் மறந்துவிட முடியாது. இன்று நாட்டின் வௌிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது. சில தருணங்களில் கஷ்டங்களை அனுபவிக்க நேரிட்டது. ஆனாலும் இன்று சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கிகளுடனான ஒப்பந்தம் சாதகமான முறையில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.
அதனை அனுரகுமாரவோ சஜித் பிரோமதாசவோ செய்யப் போவதில்லை என்பது மக்களுக்குத் தெரியும். சஜித் பிரேமதாச இதற்கு முன்னர் செய்த இரு அமைச்சுக்களையும் வலுவிழக்கச் செய்தவர் அவரை நம்பி நாட்டை கையளிக்க முடியாது.” என்றார்.


இந்த பொதுக் கூட்டத்தில் வடமத்திய மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான உதயகாந்த குணதிலக, ராதிக விக்ரமசிங்க, சுதத் மஞ்சுள ஆகியோரும் உரையாற்றினர். மாகாண, உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், பிரதேச அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்தொகையான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.