மன்னார் கல்வி வலயத்தில் ஒரு பிரபலயமான பாடசாலையில் தகுதியற்ற அதிபர் நியமிக்கப்பட்ட பின் அப் பாடசாலையின் மாணவர்களின் அடைவுமட்டம் பாரிய வீழ்ச்சியை கண்டு வருகின்றது. அத்துடன் மாணவர்களின் கல்வி . ஒழுக்கம் மற்றும் ஆன்மீகமும் இன்று கேள்விக் குறியாக மாறி வருவதால் இப்பாடசாலைக்கு தகுதியான அதிபரை நியமிக்குமாறு வங்காலை பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.
திங்கட்கிழமை (26) காலையில் வங்காலை பகுதியிலுள்ள பிரபலயமான பாடசாலையைச் சார்ந்த மாணவர்களின் பெற்றோர் பதாதைகளை ஏந்தியவாறு இப்பாடசாலையின் அதிபரை உடன் மாற்றுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் இறங்கி இருந்தனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின்போது இவர்கள் தங்கள் கரங்களில் எந்தியிருந்த பதாதைகளில் ‘ஆளுமையில்லா அதிபர் எமக்குத் தேவையில்லை’
‘உன் குடும்ப சுயநலத்துக்காக எமது மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்கதே’
‘தாய்மையின் சிகரமே ஆளுநர் அம்மா , உங்கள் பிள்ளைகள் அழிகின்றனரே’
‘சொந்த புத்தியில் இயங்கத் தெரியாத உனக்கு ஏன் 1ஏபி பாடசாலை?’
‘மாணவர்களின் கல்வி ஓழுக்கம் உன்னால் பாழடைகின்றது’
‘உனது சுயநலத்துக்காக ஊரின் வளர்ச்சியில் கை வைக்காதே’
‘ஆனாள் அன்னையின் கல்விக் கூடத்தை காடையர் கூடம் ஆக்காதே’ போன்ற வாசகங்கள் கொண்ட பதாதைகளை போராட்டக்காரர்கள் தங்கள் கரங்களில் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டத்தின்போது இச் சம்பவ இடத்துக்கு வருகை தந்த மன்னார் கல்வி வலய பணிப்பாளர் மற்றும் பிரதி கல்வி வலய பணிப்பாளர் ஆகியோர் சம்பந்தப்பட்டோரிடம் கலந்துரையாடியிருந்தனர்.
இவர்களிடம் பெற்றோர் அதிபருக்கு எதிரான மகஜரும் கையளித்து இருந்தனர்.
தேசிய பாடசாலை தகுதியுடைய எமது பாடசாலைக்கு சிறப்பான கல்வித் தகுதி , அனுபவம் , நிர்வாகத் திறன் , நல்லொழுக்கம் கொண்ட அதிபர் ஒருவரை நியமிக்குமாறு தங்களின் மகஜரில் கோரியுள்ளனர்.
(வாஸ் கூஞ்ஞ)