நுவரெலியா கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் மமா/நு/ டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தின் தற்போதைய அதிபரை, உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தி இன்று (26) மாணவர்களது பெற்றோர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து அடங்கிய குழுவினர் பாடசாலையின் நுழைவாயிலுக்கு முன் நின்று நமது எதிர்ப்பை வெளிகாட்டினர்
குறித்த பாடசாலையின் அதிபர் பாடசாலையில் ஆரம்ப பிரிவிற்கு உணவு சமைத்து வரும் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அவரையே தற்போது திருமணம் முடித்துக் கொண்டதாகவும் , பாடசாலையில் கடமையாற்றும் போது மது அருந்துவதாகவும் பாடசாலையில் பல நிதி மோசடிகள் செய்ததாக நிரூபிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டுள்ளது என பாடசாலைக்கு முன் ஒன்றுகூடினர்.
470 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் பெண் ஆசிரியைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என தெரிவித்து இப் பாடசாலைக்கு பொருத்தமான வேறொரு அதிபரை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
குறித்த அதிபர் தற்போது மமா/நு/ டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தமது நிர்வாக கடமைகளை சரியாக செய்யாத காரணத்தினால் பாடசாலையின் கல்வி நிலை தாழ்ந்துள்ளதாகவும், அதிபர் மற்றும் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிலவுவதாகவும் மேலும் தெரிவித்தனர் இதனால் கல்வி கற்கும் மாணவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த நுவரெலியா வலயகல்வி பணிப்பாளர்கள் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் செய்து நீதியான பதிலை வலய கல்வி பணிமனை வழங்க வேண்டும் உரிய தீர்வு கிடைக்காது விட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் தெரிவித்ததுடன் பாடசாலையை மூடுவதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் அதிபரை உடனடியாக இப்பாடசாலையை விட்டு இடமாற்றம் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் பாரிய எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்தனர்.