சமீபத்தில் முடிவடைந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாகர் இரு வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்திருந்தார். ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே பதிப்பில் இரு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்றபெருமையையும் அவர், பெற்றிருந்தார். சரித்திர சாதனை படைத்த மனு பாகருக்கு சென்னை நொளம்பூரில் வேலம்மாள் நெக் சஸ் பள்ளி சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
செண்டை மேளம் முழங்க விழா நடைபெற்ற இடத்துக்கு மனு பாகர் அழைத்து வரப்பட்டார். அப்போது அவருக்கு கிரீடம் மற்றும் ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் வெள்ளியால் செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றும் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் சிறந்த திறனை வெளிப்படுத்திய வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த 642 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.07 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து ‘வேலம்மாள் விஷன் ஃபார் ஒலிம்பிக் மெடல் 2032’ திட்டத்தையும் மனு பாகர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 22 வயதான மனு பாகர், மாணவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் மீண்டும் நம்பிக்கையுடன் செயல்படுவது எனக்கு கடினமாக இருந்தது. ஏனெனில் டோக்கியோ ஒலிம்பிக்கின் போது நான் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்தேன், ஆனால் அங்கு சிறப்பாக செயல்படவில்லை. அங்கு தோல்வியை ருசித்த நான் பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளேன். இதுதான் விளையாட்டின் அழகு. ஒரு போட்டியில் நீங்கள் தோல்வி அடைவீர்கள், மற்றொன்றில் வெற்றி பெறுவீர்கள். ஆனால், நீங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே அது நடக்கும்.
இலக்கை அடைய, நாம் நிறைய கடின உழைப்பையும் முயற்சியையும் செலுத்த வேண்டும். இலக்கை பெரிதாக வைத்து அதை அடைய உழைக்க வேண்டும். பெரிய அளவிலான கனவு காண முடிந்தால், பெரிய அளவில் சாதிக்க முடியும். எனவே, எப்போதும் பெரிய கனவுகளுடன் தொடங்குங்கள்.
நமக்கு பல தொழில் வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ ஆக வேண்டியதில்லை. விளையாட்டு ஒரு அழகான வாழ்க்கையை வழங்குகிறது. பணஉதவி முதல் விளையாட்டுத் துறையில் எல்லாமே கிடைக்கும். இதனால் மாணவர்கள் அதை ஒரு தொழிலாக மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
எனது உத்வேகம் என் தாயிடமிருந்து வந்தது. என்னை இந்தநிலைக்கு உருவாக்கியவர் அவர்தான். பெற்றோரின் ஆதரவு இல்லாமல், ஒரு குழந்தை எதையும் செய்ய முடியாது. எனது துப்பாக்கி சுடுதல்வாழ்க்கையும் பயணமும் பள்ளியில் தொடங்கியது. எந்தவொரு விளையாட்டு வாழ்க்கையும் ஆரம்பம் முதலில் வீட்டிலிருந்தும், பின்னர் பள்ளியிலிருந்தும் நிகழ்கிறது. நீங்கள் என்னவாக மாறுகிறீர்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளனர்.
எனது துப்பாக்கி சுடுதல் வாழ்க்கை எட்டரை ஆண்டுகளை கடந்துள்ளது. நான் கிட்டத்தட்ட உலகின் பாதி பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளேன். நான் பல்வேறுவகையான மக்களையும் கலாச்சாரங்களையும், அவர்களின் பின்னணிகளையும் போராட்டங்களையும் பார்த்திருக்கிறேன், அவர்களின் பயணங்களையும் அறிந்திருக்கிறேன்.
நாம் எங்கிருந்து வந்தோம், கலாச்சார பின்னணி ஆகியவை குறித்துஒருபோதும் வெட்கப்படக்கூடாது. நீங்கள் அதை பெருமையுடன் சுமக்கவேண்டும். உங்களைப்பற்றி நீங்கள் பெருமைப்பட வேண்டும்.
தொடக்கத்தில் எனக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது, மக்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதும் தெரியாது. எனக்குத் பல விஷயங்கள் தெரியாது. ஆனால், நானே கற்றுக் கொண்டேன். மக்கள் எனக்குபல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவினார்கள். புதிய ஒன்றைக் கற்றுக்கொள்ள நீங்கள் எப்போதும் ஒரு ஆசிரியரையோ அல்லது உங்கள் பெற்றோரையோ அணுகலாம்.
நீங்கள் சந்திக்கும் எந்த சிறியபின்னடைவையும் கண்டு பின்வாங்காதீர்கள். நீங்கள் ஒரு போட்டியில் வெற்றி பெறவில்லை என்றாலோ அல்லது தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவில்லை என்றாலோ, சோர்ந்துவிடாதீர்கள், ஆனால் உங்களை ஒன்றிணைத்துக் கொள்ளுங்கள், மீண்டும் எழுந்து தொடர்ந்து செல்லுங்கள்.
தென் இந்திய உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது அம்மாஅருமையாக தோசை செய்வார். அதை விரும்பி சாப்பிடுவேன். தமிழகத்தை சேர்ந்த பிரபலங்களில் நடிகர் விஜய், கிராண்ட் மாஸ்டர்பிரக்ஞானந்தா ஆகியோரை அறிவேன். எனது தோள்களுக்கு ஓய்வுகொடுக்க வேண்டியிருப்பதால் அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்கு நான் எந்தவிதமான போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் டெல்லியில் வரும் அக்டோபர் 13 முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கமாட்டேன். ஓய்வுக்கு பின்னர் அடுத்த போட்டிகளில் பங்கேற்பது குறித்து யோசிப்பேன். இவ்வாறு மனு பாகர் கூறினார்.