கெரவலப்பிட்டிய ‘சொபாதனவி’ ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்திற்கு திரவ இயற்கை எரிவாயு சேமிப்பிற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், எல்என்ஜி எரிவாயுபரிமாற்றம் மற்றும் விநியோகம் தொடர்பில் இலங்கை எல்.டி.எல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மற்றும் பெட்ரோநெட் எல்.என்.ஜி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு (20) பிற்பகல் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.
இலங்கை எல்ரீஎல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நுஹுமான் மரிக்கார் மற்றும் இந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஐி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அக்ஷய் குமார் சிங் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.இந்த நிகழ்வில் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கையின் நுகர்வோர்களுக்கு தொடர்ச்சியான மற்றும் தரமான மின்சார விநியோகத்தை உறுதிசெய்து குறைந்த செலவில் மின்சாரத்தை வழங்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கத்திற்கமையவே இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.