இந்திய நாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், பிரதமர் மோடி தொடர்ந்து 11வது முறையாக தேசிய கொடி ஏற்றினார். தேசிய கொடியை ஏற்றிய பிரதமர், முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டை வண்ண விளக்கொளியில் மின்னியது. இதேபோன்று, பழைய மற்றும் புதிய நாடாளுமன்ற வளாகங்கள், குதுப்மினார் உள்ளிட்ட வரலாற்று தொடர்புடைய இடங்களும் மூவர்ண விளக்கொளியில் அழகூட்டப்பட்டு கண்களுக்கு விருந்து படைத்தன.
சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள இந்தியா கேட், குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் உலக பாரம்பரிய சின்னமான ஹூமாயூன் சமாதி உள்ளிட்ட பகுதிகள் மூவர்ண விளக்கொளியில் ஜொலித்தன. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் மற்றும் மாநகராட்சி கட்டடங்களும் மூவர்ண விளக்கொளியில் கண்களுக்கு விருந்து படைத்தன.