கடந்த மாதம் 28ஆம் தேதி மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர் மற்றும் விடுதியில் கடமையில் இருந்தவர்களின் கவனயீன குறைவால் இறந்த இளம் தாயான திருமதி சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த போதும் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
தாமதிக்கும் நீதி மறக்கப்பட்ட நீதியாகவே நாம் கருதுகிறோம். ஆகவே வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் இறந்தவருக்கு நீதி வேண்டும்
இப்படி இன்னொரு கொலை நடைபெறக்கூடாது எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க நினைக்கும் மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக சிந்துஜாவுக்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டம் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயகப் போராட்டமாக நேற்றைய தினம் (13) காலை 9 மணி தொடக்கம் நண்பகல் வரை இப்போராட்டம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.
இதில் மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களும் தங்கள் வாய்களை கறுப்புத் துணிகளால் கட்டியவாறு கறுப்புக் கொடிகளையும் பதாதைகளையும் ஏந்தியவாறு இப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன் இறந்த சிந்துஜாவின் தாயாரும் சிந்துஜாவின் கைக்குழந்தையுடனும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தாள்.
இங்கு போராட்டக்காரர்கள் தங்கள் கைகளில் ஏந்தியிருந்த பதாதைகளில் ‘மருத்தவத் துறையின் அறம் எங்கே?’
‘பணத்துக்கு மனித உயிரை விலை பேசலாமா மருத்துவம்.’
‘மாபியாக்களின் கூடாரம் ஆகலாமா? வைத்தியதுறை’
‘குற்றவாளிகளுக்கு இடமாற்றமல்ல பதவி நீக்கம் வேண்டும்’
‘உயிர் காக்கும் வைத்தியர்களே மனித நேயத்தை மதியுங்கள்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஒவ்வொருவரும் கைலேந்திய நிலையிலேயே போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்தமையும் காணக்கூடியதாக இருந்தது
(வாஸ் கூஞ்ஞ)