சிந்துஜா மரணத்தில் குற்றம் காணப்பட்ட 4 பேர் பதவி நீக்கம்..!!

மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணித்த சிந்துஜா என்ற இளம் தாயின் மரணத்துக்கு காணமாக கண்டறிந்தவர்களில் நான்கு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிற போதும் மற்றறையவரும் பணி நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப் படுத்தும் வரை தனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என யாழ் வைத்திய கலாநிதி செந்தூரன் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் பொது வைத்தியசாலையில் சிந்துஜா என்ற இளம் தாய் மரணித்த சம்பவத்தை தொடர்ந்து பொது மக்கள் மத்தியில் அரச வைத்தியசாலை மற்றும் வைத்திய குழாம் மீதும் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரச வைத்தியசாலைகள் மீது மக்கள் நல்லெண்ணம் கொள்ள வேண்டும் என்பதற்காக யாழ் வைத்தியர் செந்தூரன் மன்னாரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதாவது மன்னார் பொது வைத்தியசாலையில் சிந்துஜா என்ற இளம் தாய் மரணிக்க காரண கத்தாவாக இனம் காணப்பட்ட ஐந்து பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட வேண்டும் என்ற பலரின் கோரிக்கையை முன்வைத்து வைத்தியர் செந்தூரன் நேற்று காலை 9 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

அதே நேரத்தில் மரணித்த சிந்துஜா விடயத்தில் நீதி கோரி மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் எற்பாட்டில் வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டமும் இடம்பெற்று இருந்தது.

இவற்றை கவனத்தில் எடுத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் சம்பவ இடத்துக்கு மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீபன் சகிதம் சென்றிருந்தார்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் வைத்தியர் செந்த}ரன் அவர்களுடனும் அவருடன் அங்கு இருந்த மக்களுடனும் உரையாடிக் கொண்டிருந்த பொழுது மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குமார் விக்கரமசிங்க அவ்விடத்துக்கு வருகை தந்து விசாரணையில் குற்றம் காணப்பட்ட ஐவரில் வைத்தியரைத் தவிர நான்கு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது என மன்னார் அரசாங்க அதிபரிடமும் வைத்தியர் செந்தூரன் அவர்களிடமும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் வைத்தியரை அணுகி இத்துடன் உங்கள் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வருமா? என வினவியபோது குற்றம் காணப்பட்ட ஐந்து பேரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டு மரணித்த சிந்துஜா குடும்பத்துக்கு இழப்பீடு கிடைக்கப்பெற ஆவண செய்யப்பட வேண்டும். அதன் பின்னே எனது இந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படும்

அப்பொழுதுதான் மக்களுக்கு வைத்தியசாலை மீதும் வைத்தியர்கள் மீதும் நம்பிக்கை எற்படும் என இவ்வாறு தெரிவித்தார்.

(வாஸ் கூஞ்ஞ)