நடிகர் விஜய்க்கு திமுக எம்.பி.கனிமொழி சொன்ன அட்வைஸ்!

திரையுலகின் முன்னணி நடிகர் விஜய், அரசியலில் தடம் பதிக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி தொடங்கி, உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறார்.

விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கு இடத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் திமுக எம்.பி.கனிமொழி கலந்துகொண்டார். அப்போது, அவரிடம் நடிகர் விஜய்க்கு என்ன அறிவுரை கூறுவீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எம்பி கனிமொழி, “விஜய் குடும்பத்துடன் அவரது சிறுவயது முதலே எனக்கு பழக்கம் இருக்கிறது. இந்த இடத்திற்கு, எல்லாரும் கொண்டாடும் நட்சத்திரமாக வருவதற்கு அதற்கான உழைப்பு, அதற்கான பாதை எல்லாமே அவருக்கு புரிந்ததால் தான் அதை செய்ய முடிந்தது. அதே தெளிவோடு, அதே உழைப்போடு அவர் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும்,” என்று தெரிவித்தார்.