ஏழைகளின் உணவு என அழைக்கப்படும் பாணின் விலை மன்னாரில் குறைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கிடைக்கப் பெற்ற முறைபாட்டைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்திலுள்ள வெதும்பக உரிமையாளர்களுடன் நேற்று (12) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடாத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து பாணின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்
ஏழைகளின் உணவு என அழைக்கப்படும் பாணின் விலை மன்னார் மாவட்டத்தில் ஏனைய மாவட்டங்களை விட அதிகமாக காணப்படுகின்றது.
ஏனைய மாவட்டங்களில் பாணின் விலை 130 ரூபா தொடக்கம் 140 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆனால் மன்னாரில் பாணின் விலை அதிகமான விலைக்கு 160 ரூபா தொடக்கம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இது இங்குள்ள மக்களுக்கு மிகவும் அசௌகரியமான நிலையை எற்படுத்தியுள்ளதை பல்வேறுபட்ட மக்கள் தனது கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதனையிட்டு நேற்று (12) மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து வெதுப்பக உரிமையாளர்களும் அழைக்கப்பட்டு ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதையிட்டு செவ்வாய் கிழமை (13) தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் சாதாரண பாண் 140 ரூபாவுக்கு விற்பனை செய்ய ஏகமனதாக அனைத்து வெதுப்ப உரிமையாளர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.
ஆகவே இந்நாளிலிருந்து மன்னாரில் பாணை மக்கள் 140 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடியும்.
அதேவேளை இவ்வளவு காலமும் மன்னார் மாவட்டத்தில் வெதுப்பகச் சங்கம் அற்ற நிலை காணப்பட்டது.
இதனால் இன்றையத் தினம் (12) இதற்கான சங்கம் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன் இதற்கான நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றுள்ளது.
இதனால் எதிர்காலத்தில் மன்னாரில் வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் பற்றிய தீர்மானங்கள் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
இன்றைத் தினம் (12) எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக பாண் விற்பனை செய்யப்படுகின்றதா என்பதும் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு விற்பனை செய்யப்படாவிடில் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு 0232222235 மூலம் தொடர்பு கொண்டு முறையீடு செய்ய முடியும்.
அத்துடன் நேரடியாகவும் முறையீடு செய்ய முடியும். ஆகவே மன்னாரில் பாணை 140 ரூபாவுக்கு விற்பனை செய்யும்படி வேண்டப்படுகின்நிர்கள் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
(வாஸ் கூஞ்ஞ)