இங்கிலாந்து மண்ணில் நடத்தப்பட்டு வரும் தி ஹண்ட்ரட் லீக் தொடரில் சதன்ர் ப்ரேவ் அணிக்காக விளையாடி வருகிறார் பொல்லார்ட்.
இந்த தொடரின் 24வது லீக் போட்டியில் சதர்ன் ப்ரேவ் அணியை எதிர்த்து ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி களமிறங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 100 பந்துகளில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்களை விளாசியது. அதிகபட்சமான டாம் பேன்டன் 17 பந்துகளில் 30 ரன்களை சேர்த்தார்.
சதர்ன் ப்ரேவ் அணி சார்பாக கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளையும், பிரிக்ஸ் மற்றும் ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின்னர் களமிறங்கிய சதர்ன் ப்ரேவ் அணி 76 பந்துகளில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 78 ரன்களை சேர்த்தார். அப்போது ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணியின் நட்சத்திர பவுலரான ரஷித் கான் பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார்.
அவர் வீசிய முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்த பொல்லார்ட், 2வது பந்திலும் அபாரமாக லாங் ஆஃப் திசையில் சிக்சரை விளாசினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட, 3வது பந்திலும் அதே லாங் ஆஃப் திசையில் பொல்லார்ட் ஹாட்ரிக் சிக்சரை விளாசி தள்ளியுள்ளார். பின்னர் 4வது பந்தில் லெந்தை மாற்றிய ரஷீத் கான், கொஞ்சம் மிடில் பிட்சில் வீசியுள்ளார்.
அதனை பேக் ஃபூட்டில் சென்று பொல்லார்ட் சிக்ஸ் அடிக்க, கடைசி பந்தில் மீண்டும் லாங் ஆஃப் திசையிலேயே சிக்சர் அடித்து அதிர்ச்சி கொடுத்தார். ரஷித் கான் வீசிய 5 பந்துகளில் 5 சிக்சரை பொல்லார்ட் விளாசியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பாக ஆடிய பொல்லார்ட் 23 பந்துகளில் 5 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 45 ரன்களை விளாசி ரன் அவுட்டானார்.
இறுதியாக சதர்ன் ப்ரேவ் அணி, 99 பந்துகளில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. உலகின் தலைசிறந்த டி20 ஸ்பின்னரான ரஷித் கான் பவுலிங்கிலேயே பொல்லார்ட் இப்போதும் அதிரடியாக தொடர்ந்து 5 சிக்சர்களை விளாசியதால், அவரை ஓய்வில் இருந்து வெளி வருமாறு மும்பை ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.