ஊடக தர்மம் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் – பிரதி தேர்தல் ஆணையளர்  

தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் ஊடகதர்மம் சமூக ஊடகங்களுடனும் சம்பந்தப்படுவதாகவும், தேர்தல் காலப் பகுதியில் இந்நெறிமுறைகளுக்கு இணங்க சமூக ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்றும் எதிர்காலத்தில் ஊடக நெறிமுறைகளை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதித் தேர்தல் ஆணையாளர் பியூமி ஆடிகல தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (9) இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கருத்துக்களை வெளியிடும் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

சமூக ஊடகங்கள் தொடர்பான ஒழுங்கு விதிகளுக்காக தேர்தல் ஆணைக்குழுவின் உள்ளகக் கண்காணிப்புக் குழு ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் கண்காணிப்புக் குழு, தன்னார்வத் தொண்டுக் குழுக்கள் என்பன வழங்கும் தகவல்கள் சமூக ஊடக ஒழுங்கமைப்புக் குழுவிற்கு அனுப்பப்படுவதுடன் பொருத்தமான  தந்திரோபாய வழிகளுடன் பொருந்தும் உள்ளீடுகளை சமூக ஊடக நிருவாகிகளுடன் கலந்துரையாடி அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். 

ஒவ்வொரு தடவையும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் என்பவற்றுக்கு இணங்க சமூக ஊடகங்கள் செயற்பட வேண்டும் என தெளிவு படுத்திய பிரதி ஆணையாளர் வாக்களிப்புக் காலப்பகுதியில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதுடன் இது தொடர்பாகக் கண்டறிவதற்கு குழு ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்காக பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டார். 

அவ்வாறு சமூக ஊடகங்களுக்கு ஊடாக வேட்பாளர்களை ஊக்குவிக்கும் போது ஏனைய கட்சிகளுக்கு அல்லது வேட்பாளருக்குப் பாதிப்பு ஏற்படுவதாக அல்லது தவறான மற்றும் பிழையான தகவல் பரப்பப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டால் தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பாக தலையிட்டு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என சுட்டிக்காட்டினார்.

தற்போது இளைஞர்கள் டிக் டாக் மற்றும் இன்ஸ்டாக்ராம் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவதாகவும் முதற்கடவையாக வாக்குகளைப் பயன்படுத்தும் இளைஞர்களின் வாக்குப் பயன்பாடு சமூக ஊடகங்களுடன் இணைந்துள்ளதாகவும் இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு விசேட கவனம் செலுத்துவதாகவும் பிரதித் தேர்தல் ஆணையாளர்  தெளிவுபடுத்தினார். 

அவ்வாறே தேர்தல் ஆணைக்குழு பிரச்சாரம் செய்ய முடியாத காலம் அறிவிக்கப்படும் போது சமூக ஊடகங்களை அமைதிப்படுத்துவது சிக்கலானது என்று குறிப்பிட்ட ஆணையாளர், இக்காலப் பகுதியில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் எவ்வித செல்வாக்கையும் செலுத்தாது எனக் குறிப்பிட்டதுடன், சுற்றுநிருபம் மற்றும் சட்ட விதிகளின் படி பிரச்சார வேலைகளை மட்டுப்படுத்துவதற்கு  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் வெறுப்பு பேச்சுக்கள், போலித் தகவல்களை பரப்புதல் போன்றவை இடம்பெற்றால் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழு  தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டிய ஆணையாளர்  தேர்தல் காலப் பகுதியில் ஊடகத் ஒழுங்கு முறைகளுக்கு இணங்க செயல்படுமாறு அவர் கோரிக்கை விடுத்தார். 

இம்முறை தேர்தலின் போது செயற்கை நுண்ணறிவு பயன்படுவதாக தேர்தல் ஆணைக்குழு எதிர்பார்ப்பதுடன் அதற்காக அவசியமான ஒத்துழைப்புக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்புடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களுக்கு ஊடாக யாரேனும் வேட்பாளர் அல்லது கட்சிக்கு பாரபட்சம் காட்டாதவாறு செயல்படுமாறு பிரதித் தேர்தல் ஆணையாளர் பியூமி ஆடிகல கோரிக்கை விடுத்தார்.