பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதற்கு முன்னர் 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் நார்வே வீரர் ஆண்ட்ரியாஸ் தோர்கில்சன் 90.57 மீட்டர் தூரம் எறிந்ததே சாதனையாக இருந்தது. இந்த 16 வருட சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார் அர்ஷத் நதீம். மேலும் 40 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
சாதனை படைத்துள்ள அர்ஷத் நதீம் கடந்து வந்த பாதை வியப்பானது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கானேவால் கிராமத்தைச் சேர்ந்தஅர்ஷத் நதீம் கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் விளையாட்டுகளை முயற்சித்துள்ளார். ஆனால் அவரது பயிற்சியாளர் ஈட்டி எறிதலுக்கு நல்ல உடலமைப்பை பெற்றுள்ளதாகவும் எனவே அதில் கவனம் செலுத்தும்படியும் அர்ஷத் நதீமுக்குஅறிவுரை வழங்கினார். இதன் பின்னர் 2016-ம் ஆண்டில் இருந்துதான் ஈட்டி எறிதலில் முழுமூச்சாக ஈடுபடத் தொடங்கினார் அர்ஷத் நதீம். பாகிஸ்தானில் தரமான பயிற்சி வசதிகள் இல்லாத போதிலும் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள காலி இடத்தில் பயிற்சி மேற்கொண்டார். கிரிக்கெட் விளையாடிய காலங்களில் வேகப்பந்து வீச்சாளராக அர்ஷத் நதீம் இருந்துள்ளார். இதனால் அந்த வேகம் ஈட்டியை விரைவாக செலுத்துவதற்கு அவருக்கு நன்கு கைகொடுத்தது. அதுவே அவரது பலமாகவும் மாறியுள்ளது.
நதீம் குடும்பத்தில் அவரது தந்தை முஹம்மது அஷ்ரஃப் மட்டுமே சம்பாதிப்பவராக இருந்தார். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உணவு கிடைப்பதே சிரமமாக இருந்துள்ளது. வறுமை சூழ்ந்த போதிலும் தனது கனவை அர்ஷத் நதீம் கைவிடவில்லை. அவரது ஆரம்ப நாட்களில் பயிற்சிக்காகவும் பிற இடங்களுக்குச் சென்று விளையாடுவதற்கும் கிராம மக்கள் மற்றும் உறவினர்களும் நன்கொடை வழங்கி உதவியுள்ளனர். இதை தனது விளையாட்டு திறனை வளர்த்துக் கொள்ள சரியாக பயன்படுத்திக் கொண்டார் அர்ஷத்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பாகிஸ்தானில் இருந்து அர்ஷத் நதீம் உட்பட 7 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதில் அர்ஷத் நதீம் மற்றும் அவரது பயிற்சியாளர் சல்மான் பயாஸ் பட் ஆகியோருக்கு மட்டுமே விமான பயணத்துக்கான டிக்கெட்களை பாகிஸ்தான் விளையாட்டு வாரியம் ஏற்பாடு செய்துகொடுத்தது. ஆனால் 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர், பங்கேற்ற போது பாகிஸ்தான் அரசிடம் இருந்து எந்தவித ஆதரவும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு சில மாதங்களே இருந்த நிலையில், பழைய ஈட்டியை கொண்டுபயிற்சி செய்வது சிரமமாக இருப்பதாகவும், இதனால் புதிய ஈட்டியை வாங்கிக்கொடுக்குமாறும் தனது நாட்டு அதிகாரிகளிடம் அர்ஷத் நதீம் கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக அவர், சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தது பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது. இது ஒருபுறம் இருக்க அவரது நண்பர்களும், அண்டை வீட்டாரும் அர்ஷத் நதீம் வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான ஏற்பாடு மற்றும் பயணச் செலவுகளை ஏற்றுக் கொண்டனர்.
நதீமுக்கும், பெரும்பாலான ஈட்டி எறிதல் வீரர்களைப் போலவே, அவரது முழங்கால்கள் மற்றும் தோள்களில் பிரச்சினைகள் இருந்தன. அவர் பல அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த ஆண்டு பிப்ரவரியில் கூட அறுவை சிகிச்சை செய்திருந்தார். இதனால் அவர், ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியுமா? என்ற சந்தேகம் கூட எழுந்தது. ஆனால் மன வலிமை மற்றும் நம்பிக்கையுடன் மீண்டு வந்து தற்போது உலகமே வியக்கும் அளவில் சாதனையை படைத்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் அர்ஷத் நதீம் 84.62 மீட்டர் தூரம் எறிந்து 5-வது இடத்தையே பிடித்திருந்தார். ஆனால் அதன் பின்னர் அவர், தனது செயல் திறனை மெருகேற்றினார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றார். முன்னதாக 2022-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் 90.18 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இதன் மூலம் ஆசியாவைச் சேர்ந்த வீரர்களில் 90 மீட்டர் தூரத்தை கடந்து ஈட்டியை எறிந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். அதைவிட தற்போது கூடுதல் தூரம் ஈட்டியை செலுத்தி இந்தியாவின் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இதை அவர், காயங்களுக்கு இடையிலும், மற்ற நாடுகளின் விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கக்கூடிய சிறந்த வசதிகள் மற்றும் உபகரணங்கள் இல்லாத நிலையிலும் சாதித்துக் காட்டியதுதான் வியக்கவைத்துள்ளது.