இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிகெட் போட்டியை 110 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றதுடன் இலங்கை அணி இந்த தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அவிஷ்கா பெர்னாண்டோ அதிகபட்சமாக 96 ஓட்டங்களையும், குஷல் மெண்டிஸ் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ரியான் பராக் 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 249 ஓட்டங்கள் என்ற வெற்றி இலங்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 26.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அணித்தலைவர் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றதுடன், வாசிங்டன் சுந்தர் 30 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.்
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் துணித் வெள்ளாலகே 05 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி 27 வருடங்களுக்கு பின்னர் இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இருதரப்பு ஒருநாள் தொடர் ஒன்றை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
கடந்த 1997 ஆம் ஆண்டே இந்திய அணிக்கு எதிரான இதுபோன்ற தொடரை இலங்கை அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.