மன்னார் பொது வைத்தியசாலை வளாகம் பரந்த பரப்பளவாக காணப்படுவதால், வெளிகளாக காணப்படும் நிலத்தில் உடல் நலத்துக்கு பயன்படும் தாவரங்கள் பயிரிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எச்.எம்.அஸாத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
மன்னார் பொது வைத்தியசாலை வளாகம் கட்டிடங்கள் தவிர, மிக அதிகமான வெற்றுக் காணிகளாக காணப்படுகின்றது.
ஆகவே இதன் வெற்றுக் காணிகளில் மக்களின் உடல் நலத்துக்கு அமைவான பயிர்ச் செய்கைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை அனைவரின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டுள்ளேன்.
அத்துடன் வைத்தியசாலையின் சுற்றுச் சூழலையும் சுத்தமாக வைத்திருக்கலாம் . அண்மையில் எமது வைத்தியர்கள் , ஊழியர்கள் உட்பட பலரின் ஒத்துழைப்புடன் பாரிய சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பயிர் செய்கையில் கிடைக்கும் வருமானத்தை இவ் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உதவி செய்யும் ஒரு நோக்கமாகவே நாம் முன்னெடுக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதை நாங்கள் தொடர்ந்து பராமரிக்காவிடில் இது மீண்டும் பற்றைகளாக மாறும் அபாயமும் தோன்றி வருகின்றது. ஆகவேதான் நாங்கள் தற்பொழுது சோளம் செய்கை மற்றும் மூலிகை வளர்ப்பு போன்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
இதனால் இந்த வைத்தியசாலை ஒரு பசுமை கொண்டதாக காணப்படும். இதனால் வளி மாசடைதல் குறைக்கப்படும்.
அத்துடன் மன்னாரில் பாரிய வெப்பநிலை காணப்படுவதால் இந்த பயிர் செய்கை இங்கு வெப்பத்தை குறைக்கும் ஒரு நடவடிக்கையாகவும் காணப்படும் எனவும் இவ்வாறு தெரிவித்தார்.