வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276ஐ கடந்துள்ளது. 200க்கும் அதிகமானோர் காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வயநாட்டை அடுத்த சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில், உடல்கள் வைக்கப்பட்டுள்ள மேப்பாடி அரசு மருத்துவமனையில் கூட்டம் அலைமோதுகிறது.
குடும்பத்தை தொலைத்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள் என மருத்துவமனையில் யாருடைய உடலாவது இருக்குமா என கண்களில் நீர் ததும்ப அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
மருத்துவமனைக்கு உடலுடன் ஒரு ஆம்புலன்ஸ் வந்தவுடன், அது யார் என தெரிந்து கொள்ள, அங்கு காத்திருக்கும் மக்கள் அலைமோதுகின்றனர்.
உடல்கள் மொத்தமாக ஒரு அறைக்குள் கண்ணாடிப் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைக்குள், தன்னுடைய குடும்பத்தினர் யாருடைய உடலாவது இருக்குமா என ஒவ்வொரு உடலாக திறந்து பார்த்து கதறும் மக்களின் மனநிலை வார்த்தைகளில் வடிக்க முடியாதது.
அடையாளம் காணப்பட்ட 80-க்கும் மேற்பட்ட உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சூரல்மலையில் உள்ள இடுகாட்டில் அடுத்தடுத்து உடல்கள் எரியூட்டப்பட்டன. குடும்பத்தினர், உறவினர்களை இழந்தவர்கள் இடுகாட்டிற்கு வெளியே நின்று கதறி அழுதனர்.
இந்நிலையில், நடந்து செல்ல பாதை இல்லாத நிலையிலும், 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேலாக ராணுவ வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களும், தன்னார்வலர்களும் நடந்தே சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில், ஹெலிகாப்டர் மூலமும் மீட்புப் பணி நடைபெற்றது. ஏராளமானோர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், மோப்ப நாய்கள் உதவியுடன் வீரர்கள் தேடி வருகின்றனர்.