இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஆனால் அந்த தொடரின் முதல் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இலங்கை 2வது போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இலங்கை ஆரம்பத்திலேயே சொந்த மண்ணில் கோப்பையை கோட்டை விட்டுள்ளது.
குறிப்பாக முதல் போட்டியில் 140/1 என்ற நல்ல துவக்கத்தை பெற்ற இலங்கை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின் 5.2 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து சொதப்பிய அந்த அணி 30 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அதே போல 2வது போட்டியிலும் கடைசி 5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த இலங்கை 31 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்விக்கு காரணமானது.
முன்னதாக 2023 ஆசிய கோப்பை ஃபைனலில் இந்தியாவிடம் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டான இலங்கை படுதோல்வியை சந்தித்தது. அதே போல 2023 உலகக் கோப்பையிலும் இந்தியாவிடம் 55 ரன்களுக்கு சுருண்ட இலங்கை தோல்வியை சந்தித்தது. அத்துடன் 2023 உலகக் கோப்பையில் டாப் 8 இடத்தைப் பிடிக்க தவறிய இலங்கை 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தகுதி பெறவில்லை.
இந்நிலையில் இப்படி விளையாடும் இலங்கை தங்கள் நாட்டில் நடைபெற உள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்கு தகுதியற்ற அணி என முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசிர் அலி விமர்சித்துள்ளார். அத்துடன் முன்னாள் இலங்கை கேப்டன் ஹஸரங்கா இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா கிடையாது என்றும் அவர் சாடியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஹசரங்கா நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக இருக்கிறார்”
“ஆனால் கிரிக்கெட்டை விட அவர் பெரியவராக வந்து விட்டார் என்று நினைக்கிறேன். ஏனெனில் முதல் பந்திலேயே அவர் சுமாரான ஷாட்டை அடித்து அவுட்டானார். அவருடைய பந்துகளை சூரியகுமார் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அசால்டாக அடித்தனர். என்னைக் கேட்டால் ஆட்டநாயகன் விருதை ஹசரங்காவுக்கு கொடுத்து அடுத்த போட்டியில் ஓய்வெடுக்குமாறு சொல்லலாம்”
“ஏனெனில் முட்டாள்தனமான ஷாட்டுகளை அடிக்கும் அவரது பவுலிங்கும் அப்படியே இருக்கிறது. அவர் தன்னை பூம் பூம் பும்ராவாக நினைத்துக் கொண்டுள்ளார். ஆனால் அவர் ரவி பிஸ்னோயிடம் கற்றுக்கொள்ள வேண்டும். சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட தகுதி பெறாமல் போனதற்கு இலங்கை தகுதியானவர்கள். பாகிஸ்தான் அணியை போலவே அவர்களும் தங்களுடைய நட்பை தொடர விரும்புவது போல் தெரிகிறது. உண்மையில் இலங்கை ஆடவர் அணியை விட ஆசிய கோப்பை வென்ற மகளிர் அணி நன்றாக விளையாடியது” என்று கூறினார்.