இரத்தினபுரி ஹபுகஸ்தென்ன தோட்டத்தின் LWK பிரிவானது மக்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசமாகும்.
இங்கு ஒரு விளையாட்டு மைதானமொன்றை அமைப்பதே இங்கு வாழும் இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக அமைந்துள்ளது.
க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்கும் வசதியைக் கொண்ட இ/ கலைமகள் தமிழ் மகா வித்தியாலயமும் அமைந்திருப்பது இப்பிரதேசத்திலேயே, இக்கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கும் இந்த மைதான தேவையானது இன்றியமையாததாக அமையும் என்பதே அப்பிரதேச மக்களின் அபிப்பிராயம் ஆகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.
அந்த வகையில், ஹபுகஸ்தென்ன உறவுகளின் கோரிக்கைக்கமைய குறித்த பிரதேசத்திற்கு நேரடியாக சென்று அதற்கான காணியினை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளையும், மைதானத்தை அமைத்துக் கொடுப்பது தொடர்பான விடயங்களை மேற்கொள்வதற்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தொழிநுட்ப அதிகாரியையும் அழைத்துச் சென்று மேற்பார்வை செய்யப்பட்டது.
இங்கு வாழும் இளைஞர்களுக்கு மத்தியில் உரையாற்றும் போது, இந்த வேலைத் திட்டத்தினை முன்னெடுப்பதற்கு நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி அவர்களின் முன்னெடுப்பில் எதிர்வரும் காலங்களில் அபிவிருத்தி பணிகளை பூர்த்திசெய்ய எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதை உணரக்கூடியதாக இருப்பதாகவும், அதற்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் ஹபுகஸ்தென்ன பிரதேச வாழ் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவ்விஜயத்தின் போது இரத்தினபுரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கோபால் தம்பிராஜா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரத்தினபுரி மாவட்ட தலைவர் ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் மேலும் தெரிவித்தார்.