மும்பையைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அறியப்படுகிறார். ஐசிசி 2020 அண்டர்-19 உலகக் கோப்பையில் 400 ரன்கள் அடித்த அவர் இந்தியா ஃபைனல் செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக தேர்வான அவர் கடந்த வருடம் அதிவேகமாக அரை சதமடித்து சாதனை படைத்தார்.
அத்துடன் மொத்தமாக 625 ரன்கள் விளாசி புதிய வரலாறு படைத்த அவர் இந்தியாவுக்காக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் தனது அறிமுக போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். அத்துடன் சீனாவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நாக் அவுட் போட்டியில் சதமடித்த அவர் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வதற்கு உதவினார்.
அப்படியே கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 700+ ரன்கள் குவித்தார். அதனால் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 4 – 1 (5) என்ற கணக்கில் கோப்பையை வெல்ல உதவினார். அந்த வகையில் தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் அதிரடியாக விளையாடும் அவர் இந்தியாவின் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ளார்.
இந்நிலையில் ராஜஸ்தான் ஐபிஎல் அணியில் ஜெய்ஸ்வால் எந்தளவுக்கு கடினமாக உழைக்கிறார் என்பதை கேள்விப்பட்டு இம்ப்ரஸ் ஆனதாக இலங்கை ஜாம்பவான் சனாத் ஜெயசூர்யா பாராட்டியுள்ளார். அந்தக் கடின உழைப்பாலேயே ஜெய்ஸ்வால் இந்தளவுக்கு அசத்துவதாகவும் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“ஜெய்ஸ்வால் இந்தியாவிலிருந்து வந்துள்ள மற்றொரு சிறந்த திறமையான வீரர். நன்றாக விளையாட வேண்டும் என்ற ஆர்வமும் விருப்பமும் கொண்டுள்ள அவர் அதற்காக மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். சில தியாகங்களை செய்துள்ள அவர் அர்ப்பணிப்புள்ள குழந்தை. அதனாலயே அவர் இந்தளவுக்கு நன்றாக விளையாடி வருகிறார். அவரது பணி நெறிமுறைகளை பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்”
“அது மிகவும் கவரக்கூடிய வகையில் இருக்கிறது. சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உயர் செயல்திறன் இயக்குனர் ஜூபின் அவர்களுடன் நாங்கள் பேசும் வாய்ப்பைப் பெற்றோம். அவர் எந்தளவுக்கு கடினமான பயிற்சிகளை செய்கிறார் என்பதை எங்களிடம் தெரிவித்தார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் டி20 தொடரில் ஜெயஸ்வால் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.