பாரிஸ் ஒலிம்பிக், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்றுப் போட்டியில் மனுபார்க்கர் 3 ஆவது இடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்தார். 8 வீராங்கனைகள் பங்கேற்ற இறுதிச் சுற்றிலும் , இலக்கை குறிவைத்து சுட்ட அவர், 221.7 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான பதக்க கணக்கையும் அவர் தொடக்கி வைத்தார்.
ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் 22 வயதான மனு பாக்கர் படைத்தார். முந்தைய டோக்யோ ஒலிம்பிக் போட்டியின்போது, துப்பாக்கியில் பிரச்சனை ஏற்பட்டதால் பதக்க வாய்ப்பை இழந்த மனு பாக்கர், இம்முறை பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் 12 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. கடைசியாக 2012 லண்டன் ஒலிம்பிக்கில் ககன் நரங், விஜய் ஆகியோர் பதக்கம் வென்றிருந்தார். ஒலிம்பிக் வரலாற்றில் , துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா இதுவரை 5 பதக்கங்களை வென்றுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மனு பாக்கருக்கு, வரலாற்று பதக்கம் எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை தென் கொரிய வீராங்கனைகள் வென்றனர்.
கடந்த முறை தவறிவிட்ட பதக்கத்தை இம்முறை மகள் வென்றதால் ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரின் உள்ள குடும்பத்தார் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். இந்த இன்பச் செய்தியை இனிப்பு விநியோகித்து குடும்பத்தினர் மகிழ்ந்தனர்.