அஜர்பைஜான் இந்திய தூதரகர் ஸ்ரீதரன் மதுசூதனன் குடும்பத்துடன் அஜித்!

அஜித்தை வெறும் ஒரு நடிகர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது என்பதை அவருடன் பேசிய உரையாடல்களில் இருந்து தெரிந்துகொண்டதாக அஜர்பைஜானில் உள்ள இந்திய தூதர் ஸ்ரீதரன் மதுசூதனன் பதிவிட்டுள்ளார்.

நடிகர் அஜித் குமார் நடித்து வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 22 ஆம் தேதி முடிவடைந்தது. மகிழ் திருமேணி இயக்கும் இப்படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். த்ரிஷா , அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். வரும் அக்டோபர் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் குமார் அஜர்பைஜானில் உள்ள இந்திய தூதகர் ஸ்ரீதரவ் மதுசூதனனை அவரது வீட்டில் சென்று சந்தித்துள்ளார். அஜித்துடன் உரையாடிய அனுபவம் குறித்து ஸ்ரீதரன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில் அவர் “ அஜர்பைஜானில் நடைபெற்ற விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜித், சமீபத்தில் எங்கள் வீட்டிற்கு இரவு உணவிற்கு வந்திருந்தார். அவருடன் சக நடிகர்களான ஆரவ் மற்றும்  நிகில்  ஆகியோர் வந்தனர். சில அஜர்பைஜான் தமிழ் நண்பர்களும் எங்களுடன் இணைந்தனர். ஒரு இனிமையான மாலை. விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் நான் அஜித் படங்களைப் பார்த்திருக்கிறேன். அஜித்தை வெறும் ஒரு நடிகர் என்று மட்டும் விவரித்து விட முடியாது என்பதை எங்களுக்கு இடையிலான உரையாடலின் வழி உணர்ந்துகொண்டேன். குடும்பக் கதைகள், உணவு, சிரிப்பு என நாங்கள் அனைவரும் நள்ளிரவைத் தாண்டி அரட்டை அடித்தோம்.  எங்களின் குடும்ப கதைகளைக் கேட்டு அஜீத் உட்பட அனைவரும்  அடக்க முடியாமல் சிரித்தபோது, ​​நானும் வைதேகியும் நாங்கள் பேசுவதைக் கேட்க  டிக்கெட் வைத்து விலை பேசலாம் என்கிற எங்கள் யோசனை மீண்டும் பலப்பட்டது. 

ஆர்வத்துடன் புதிதாக ஒன்றை முயற்சிப்பதில் உள்ள மகிழ்ச்சி, வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் நமது மனநிலை எப்படி மாறுகிறது, பைக், கார், சைக்கிள் சவாரி போன்றவற்றைப் பற்றியும் சில செயல்களை செய்யும் போது நம் உடலும் மனமும் ஒற்றுமையாகச் செயல்படும் தருணங்களின் அனுபவங்கள் போன்ற விஷயங்களைப் பற்றி பேசினோம் . அஜித் சென்றப் பின்பும் என் மனதில் சில கேள்விகள் எழுந்தன. சிலர் மட்டும் ஏன் பல்வேறு விஷயங்களை செய்துபார்க்கிறார்கள். அவர்களை எது ஊக்குவிக்கிறது. அவர்களுக்கு அதில் என்ன கிடைக்கிறது? 

இந்த கேள்விகளுக்கு எனக்கு நானே சொல்லிக் கொண்ட பதில் இதுதான் எல்லா விஷயத்திலும் ஏதோ ஒரு பலன் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு செயலை செய்வதில் கிடைக்கும் அனுபவமே போதுமானது.’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.