பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா வண்ணமயமாக நடைபெற்றது. வரலாற்றிலேயே முதல் முறையாக தண்ணீரிலும், நதிக்கரையிலும் தொடக்க விழா அணிவகுப்பு நடைபெற்றது.
33ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இலங்கை நேரப்படி நேற்று 11 மணி அளவில் தொடங்கின. ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
206 நாடுகளைச் சேர்ந்த 10ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க இருக்கின்றனர். வரலாற்றிலேயே முதல் முறையாக சரிபாதி அளவாக 5ஆயிரத்து250 வீரர்களும், அதே எண்ணிக்கையிலான வீராங்கனைகளும் பங்கேற்க இருக்கின்றனர்.
சென் நதிக்கரையில் பிரபல பாடகியான லேடி காகாவின் வண்ணமயமான கலைநகிழ்ச்சிகளில் இசைக்கலைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா நடந்தது. மைதானத்துக்கு பதிலாக நதிக்கரையில் இசைக்கலைஞர்கள் அழகாய் நடனமாடினர். படகுகளில் வந்த வீரர்கள் தங்கள் நாட்டு கொடிகளை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.
இதன்படி இலங்கை பங்கேற்கும் முதல் போட்டி இன்று சனிக்கிழமை (27) நடைபெறவுள்ளது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு பூப்பந்து போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொள்ளும் விரேன் நெத்தசிங் ஆரம்ப சுற்றுப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.