இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. டி20 உலகக்கோப்பை சாம்பியனாக களமிறங்கவுள்ள இந்திய அணிக்கு, புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் பொறுப்பேற்றுள்ளார். மறுபுறம் இலங்கை அணியை கட்டமைக்க வேண்டிய பொறுப்பு அந்த அணியின் இடைக்கால பயிற்சியாளர் ஜெயசூர்யாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க இலங்கை அணி தயாராகி வருகிறது. இதனிடையே இலங்கை அணியை தயார் செய்வதற்கு ராஜஸ்தான் அணி உதவி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளர் ஜெயசூர்யா பேசுகையில், இலங்கை அணி வீரர்கள் அதிகளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விரும்புகிறோம். அதனால் எல்பிஎல் தொடரில் விளையாடியதால் எவ்வித சோகமும் இல்லை. அதன்பின் உடனடியாக இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான தயாரிப்பு பணிகளை தொடங்கிவிட்டோம்.
ராஜஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஜூபின் எங்களுக்கு உதவ முன் வந்தார். இலங்கை அணி வீரர்கள் அவருடன் 6 நாட்கள் பணியாற்றினர். அவருடன் பணியாற்றியதன் கீழ் வீரர்கள் பயிற்சிக்கான வழிமுறைகள் மற்றும் டெக்னிக்கை நிச்சயம் கற்றிருப்பார்கள் என்று நம்புகிறேன்.
அதேபோல் இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் இல்லாததை இலங்கை அணி சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவருமே தலைசிறந்த வீரர்கள். இந்திய டி20 தொடருக்கு முன்பாக இலங்கை அணி வீரர்களுக்கு சிறந்த பயிற்சியாளர்கள், பயிற்சிகள் என்று அனைத்தையும் கொடுத்துள்ளோம்.
இனி வெற்றிபெறுவது இலங்கை வீரர்களின் கைகளில் தான் உள்ளது. நமது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தற்போதைய வீரர்கள் உருவாகுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அதுவரை சிறந்த பயிற்சி வழிமுறைகளை இலங்கை வீரர்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.