2023-ம் ஆண்டின் சிறந்த இசை ஆல்பம் என்ற பிரிவில் ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்பட ஆல்பத்துக்கு ஃபிலிம் ஃபேர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் மணிரத்னத்தை புகழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் விருதை பெற்ற புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில், ஓரிரு வருடங்களுக்கு முன்பு, மணிரத்னத்துடன் பாலிக்குச் சென்று படத்திற்கான தயாரிப்புகளைத் தொடங்கினோம். ஆராய்ச்சிக்காகவும் சில இசைக் கருவிகளைப் பெறுவதற்காகவும் எங்களை அங்கு அழைத்துச் சென்றார்.
அதை நாங்கள் இந்தியாவுக்கு கொண்டு வந்து அதன் மூலம் பல புதிய ட்யூன்களை உருவாக்கினோம். மிகவும் சுவாரசியமான விஷயங்களைத் தேர்ந்தெடுக்கும் திறமை மணிரத்னத்திடம் இயல்பாகவே இருக்கிறது. மணிரத்னத்தின் தேர்வுகள் எப்போதும் தனித்துவமாகவும், முன்னோக்கி சிந்திக்க கூடியதாகவும் இருக்கும். மணிரத்னத்துக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படக்குழுவுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
68-ஆவது ஃபிலிம் ஃபேர் விருதுகள் பட்டியலில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த இசை ஆல்பம், சிறந்த பின்னணி பாடகர், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம் விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.