- நுண், சிறு, நடுத்தர தொழில் முனைவோரை வலுவூட்ட “என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா” என்ற பெயரில் புதிய நிறுவனம்.
- எப்போதும் மக்களுக்கு ‘உரிமைகள்’ வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கை – ஜனாதிபதி.
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பராட்டே சட்டத்தைத் தொடர்ந்தும் நீண்ட காலத்திற்குப் பேண முடியாது எனவும், எனவே வங்குரோத்தான வர்த்தகங்களை கையாள புதிய சட்டமூலமொன்று கொண்டுவரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உத்தேச புதிய சட்டமூலத்தில் நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களால் பெறப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நுண், சிறு, நடுத்தர தொழில் முனைவோருக்குத் தேவையான உதவிகள் மற்றும் ஆதரவை வழங்க ‘என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா’ என்ற பெயரில் புதிய நிறுவனமொன்று உருவாக்கப்படும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையில் உள்ள நுண், சிறு, நடுத்தர அளவிலான தொழில் முனைவோரை ஊக்குவிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கை நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களின் கூட்டமைப்பினால் (Ceylon Federation of MSME) நேற்று (19) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘இலங்கையில் உள்ள நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களின் ஆற்றலுடன் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் தீர்மானமிக்க முயற்சி’ என்ற வேலைத் திட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்தின் பிரதியொன்றை இலங்கை நுண், சிறு, நடுத்தர தொழில் முனைவோர் சம்மேளனத்திற்கு வழங்க முடியும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, நுண், சிறு, நடுத்தர தொழில் முனைவோர் தமது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நுண், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்பாடு செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதன்போது, இலங்கை நுண், சிறு, நடுத்தர தொழில் முனைவோர் சம்மேளனத்தின் தலைவர் சசிகா டி சில்வா ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினார்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“நுண், சிறு, நடுத்தர தொழில்முனைவோர்களாகிய உங்கள் அனைவரின் மனதிலும் அண்மைக் காலமாக பல கேள்விகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகள் என்ன என்பதை நீங்கள் கூறுவதற்கு முன், அதற்கு வழிவகுத்த பின்னணியைக் குறிப்பிட விரும்புகிறேன். அந்தப் பின்னணியில்தான் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
கடந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. பொருளாதார வீழ்ச்சியுடன், சிறு வர்த்தகங்கள் உட்பட அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சி கண்டன. அனைத்து நுண்தொழில்துறைகளும் முற்றிலும் நட்டமடைந்தன. வங்கிக் கட்டமைப்பும் பாதிப்புக்குள்ளானது. எனவே, அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற பின்னர், ஸ்திரத்தன்மையை உருவாக்கி, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்காக செயற்படுவதே எமது முதல் பொறுப்பாக அமைந்தது.
அச்சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வேலைத்திட்டத்திற்கு செல்லுமாறு எமக்கு கடன் வழங்கிய அனைத்து நாடுகளும் கேட்டுக்கொண்டன. அப்போது உடன்பாடு ஏற்பட்டு அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தன.
உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்ளுடன் உடன்படிக்கையை எட்டிய பின்னர் அந்தக் கட்டமைப்புடன் செயற்படலாம் என்று தனியார் கடன் வழங்குநர்களும் எம்மிடம் தெரிவித்தனர். நிதி மற்றும் ஆதரவு கிடைக்காமல் எம்மால் எதுவும் செய்ய முடியாது.
அந்த நேரத்தில், சில அடிப்படை விடயங்களில் நாம் உடன்பட வேண்டியிருந்தது. அதன்படி, எதிர்காலத்தில் பணத்தை அச்சிடாமலும், வங்கிகளில் கடன் பெறாமலும் இருக்கும் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியேற்பட்டது. வங்கிகளிலும் பல பிரச்சினைகள் இருந்தன.
இந்த இரண்டு முறைகளும் எமது முக்கிய வருமானமாக இருந்தன. நாங்கள் பயணித்த இந்த தவறான பாதையை விட்டுவிட்டு புதிய பாதையில் பிரவேசிக்குமாறு அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அதன்படி, நாம் சரியான பாதையில் பிரவேசித்தோம். அதன்போது வருமானம் ஈட்டுவதற்காக, சில கூட்டுத்தாபனங்களுக்கு வழங்கும் மானியங்களை நீக்க வேண்டியிருந்தது.
ஒரு சில கூட்டுத்தாபனங்களுக்கு வருடத்திற்கு 700 முதல் 800 மில்லியன் ரூபாய் வரை மானியம் வழங்கியுள்ளோம். அந்த மானியங்களை இந்நாட்டு மக்களே செலுத்தினர். எனவே நாங்கள் அதை நிறுத்த வேண்டியிருந்தது. அச்சந்தர்ப்பத்தில் எரிபொருள் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியது.
அதன் மூலம் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லாததால் வட் வரியை அதிகரிக்க வேண்டியதாயிற்று. தற்போது நமது நாட்டுப் பணத்தில் நாட்டின் பொருளாதாரம் இயங்குகிறது.
ஒரு சுமை எங்கள் மீது சுமத்தப்பட்டது. ஆனால் நாங்கள் அதை சுமக்க வேண்டியிருந்தது. நம் சுமைகளை அவர்கள் சுமக்கும் முன் நாம் நம் சுமைகளை சுமக்கும் பொறுப்பை ஏற்க முடியும் என்பதை உலகிற்கு காட்டுமாறு அவர்கள் தெரிவித்தனர். நாம் அங்கிருந்தே ஆரம்பித்தோம். இறுதியாக, எங்களுடைய நாட்டுப் பணத்தில் அரச, கூட்டுத்தாபனங்கள் அனைத்தையும் சரியாக நிர்வகிக்க முடிந்தது. எனவே, உலக சந்தையின் எரிபொருளுக்கமைய எமது பொருள் விலையையும் சீரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சில செலவுகளை நீக்குவதன் மூலம் எரிபொருள் விலையை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது. வலுசக்தி விலைகளுக்கும் இதுவே நடைபெறுகிறது. சந்தை தொடர்பில் இன்னும் பல்வேறு விடயங்கள் உள்ளன.
அடுத்த ஆண்டு அனைத்து திறமையின்மைகளையும் (Inefficiencies) அகற்ற எதிர்பார்க்கின்றோம். பொருளாதாரத்தை சீர்செய்த பின்னர், நாம் முன்னேற முடியும். வங்கிக் கட்டமைப்பும் பாதுகாக்கப்பட வேண்டும். வங்கிகளில், இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட அரச வங்கிகளுக்கு மீண்டும் மூலதனம் வழங்க வேண்டியிருந்தது.
அதற்காக நாமும் ஒரு தொகை பணத்தை செலவிட வேண்டியிருந்தது. தனியார் வங்கிகளுக்கும் அதனையே செய்ய வேண்டியிருந்தது. வங்கி முறைமையை பாதுகாத்துக் கொண்டு மட்டுமே நாம் முன்னோக்கி செல்ல முடியும்.
நாம் வழங்கும் சலுகைகள் போதுமானவை அல்லவெனவும், பொருத்தமானவர்களுக்கு சலுகைகள் சென்றடைய வேண்டும் எனவும் உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் வலியுறுத்தின. அதன்படியே நாம் அஸ்வெசும வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம். அஸ்வெசும ஊடாக சமூர்த்தியை விடவும் மூன்று மடங்கு அதிகமாக கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறது. 18 இலட்சம் பயனாளிகள் எண்ணிக்கையை 24 இலட்சமாக அதிகரித்திருக்கிறோம். குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான முதன்மைத் திட்டமாகவே அதனை செயற்படுத்தினோம்.
எமது வங்கிக் கட்டமைப்பைப் பாதுகாத்து பாரிய வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டுச் செல்லும் அதேநேரம் சிறு, நடுத்தர வர்த்தகர்களை வலுவூட்டும் வகையில் இருபது இலட்சம் பேருக்கு காணி உறுதிகளை வழங்க ‘உறுமய’ திட்டத்தை செயற்படுத்தினோம்.
திட்டத்தை நிறைவு செய்ய மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகலாம். இதன் மூலம் 20 இலட்சம் நில உரிமையாளர்கள் உருவாக்கப்படுவர். அதேபோல் 200,000 பேருக்கு வீட்டு உரிமையையும் வழங்க ஆரம்பித்துள்ளோம். பெருந்தோட்டங்கள் கிராமங்களாக பிரகடனப்படுத்தப்படவுள்ளன. அதற்காகவும் காணி மற்றும் வீட்டு உரிமைகளை வழங்குகின்றோம். இதன் கீழ், 20 – 25 லட்சம் பேருக்கு புதிய உரிமை கிடைக்கும். இவ்வாநு மக்களுக்கு உரிமையை உறுதிப்படுத்த பாடுபடுகிறோம்.
முதன்முறையாக, சாதாரண மக்களுக்கு உரிமைகளை வழங்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். இவற்றில் விவசாய நிலங்களும் உள்ளன. ஆனால் விவசாய கிராமங்களிலேயே வறுமை நிலவுகிறது. அதற்குத் தீர்வாகவே விவசாய நவீனமயமாக்கலை கிராமத்திற்கு கொண்டு செல்கிறோம். இதன் மூலம் கிராமப் புறங்களில் பணப் புழக்கம் அதிகரிக்கிறது. உரிமையும் உறுதி செய்யப்படும். வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். தனி நபர் பணப் பெறுமதி அதிகரிக்கும். இந்த முயற்சிகளுக்கு இணையாக சிறு, நடுத்தர வர்த்தகர்களுடன் முன்னேற்றத்திற்கும் வழி ஏற்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டியது அவசியமாகும். தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
தற்போது பராட்டே சட்டத்தை இடை நிறுத்தியுள்ளோம். ஆனால் அதை தொடர்ச்சியாக செய்ய முடியாது. எனவே, வங்குரோத்து நிலை (Insolvency) குறித்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளோம். அது தொடர்பாக விவாதிப்பதற்கான பிரதிகளையும் வழங்க முடியும். முதலில் அதைப் பற்றி ஆய்வு செய்யுங்கள். மறுசீரமைப்பு தொடர்பிலான சில விடயங்களும் இதற்குள் காணப்படுகிறன.
அதேபோல் ஏற்றுமதியிலும் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” என்ற புதிய நிறுவனத்தை உருவாக்குகிறோம். அதனிடமிருந்து உங்களுக்கு தேவையான ஆதரவையும் உதவியையும் பெற முடியும். தேசிய அபிவிருத்தி வங்கியையும் உருவாக்குவோம். ஒரே தடவையில் இந்த அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது. பொருளாதார முன்னேற்றதோடு படிப்படியாகவே அவற்றை செய்ய முடியும்.
இதுபற்றிய உங்கள் கேள்விகளையும் முன்வைக்கலாம். இது தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற தரப்பினருடன் கலந்துரையாடுவதற்கு நீங்கள் தயாராக இருந்தால், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இம்மாத இறுதியில் இலங்கைக்கு வரும்போது அவர்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியும்.
முதலில் இவை அனைத்தைப் பற்றியும் நீங்கள் கலந்துரையாட வேண்டும். சட்டத்தின் வாயிலாக எவ்வகையான நிவாரணங்கள் கிடைக்கும்? சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிவாரணங்களுக்கு மேலதிகமான நிவாரணங்கள் வேண்டுமா? என்பது பற்றிய உங்களது கருத்துக்களையும், பிரச்சினைகளையும் முன்வைக்கலாம். சட்டம் குறித்து அரசாங்கத்துடன் பேசலாம். ஆனால் அதற்கு முன்னதாக IMF உடன் கலந்தாலோசிப்போம். உங்களுக்கு உதவிகளை வழங்க அமைச்சுக்களின் அதிகாரிகளையும் நியமிக்க முடியும். இவ்வாறு உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் நெரஞ்சன் தேவ் ஆதித்ய, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும, ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா, பொது மற்றும் தனியார் வங்கிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், இலங்கை சிறு, நடுத்தர நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் உட்பட தொழில் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.