முல்லைத்தீவில் இடம்பெற்ற ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்ட ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று (18) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி விழா மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

ஜனாதிபதி மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்வதற்காக பொருளாதார நெருக்கடிகளையுடைய ஆனாலும் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் விசேட திறமைகளை வெளிப்படுத்தும் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் 100,000 மாணவ மாணவிகளைத் தெரிவு செய்து மாதத்திற்கு ரூ.3000/- வீதம் 12 மாதங்களுக்கு புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான நிகழ்ச்சித்திட்டம் மற்றும் தற்போது க.பொ.த.(உ.த.) கற்கும் 60 மாணவ மாணவிகள் வீதம் 100 கல்வி வலயங்களிலிருந்து தெரிவுசெய்து அந்த 6000 மாணவர்களுக்கு மாதத்திற்கு ரூ.6000 வீதம் 24 மாத காலத்திற்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் சனாதிபதி நிதியத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு வலயம் மற்றும் துணுக்காய் வலயம் என இரு பிரிவுகளாக இடம்பெற்றது.

முல்லைத்தீவு வலயத்தில் முதலாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை 412 மாணவர்களும் உயர்தர வகுப்பு மாணவர்கள் 60 பேரிற்கும் அதேபோல். துணுக்காய் வலயத்தில் முதலாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை 390 மாணவர்களும் உயர்தர வகுப்பு மாணவர்கள் 60 பேரிற்கும் மொத்தமாக 922 மாணவர்களிற்கு இப்புலமைப்பரிசில் திட்டத்திற்குரிய சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு அபிவிருத்தி லொத்தர் சபை அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.