இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா – நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதியினர் விவாகரத்தை அறிவித்துள்ளனர். “கடினமான முடிவு” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “4 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நிலையில், தற்போது நானும், நடாஷாவும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவருக்கும் இது தான் நல்லது என நம்புகிறோம். பரஸ்பர மரியாதை, தோழமையுடன் மகிழ்ச்சியை அனுபவித்த நாங்கள் எடுத்த கடினமான முடிவு இது.
மகன் அகஸ்தியா, எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் தொடர்ந்து இருப்பார். அவருக்கான மகிழ்ச்சிக்காக பெற்றோர்களான எங்களால் முடிந்த அனைத்தையும் அவருக்கு வழங்குவதை உறுதி செய்வோம். இந்த கடினமான நேரத்தில் உங்கள் ஆதரவையும் கேட்டுக்கொள்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் நடன கலைஞரான நடாஷா – இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா தம்பதிகளின் திருமணம் 2020-ம் ஆண்டு மே 31-ம் தேதி நடைபெற்றது. கடந்த மே மாதம் முதல் நெட்டிசன்கள் தம்பதிகளுக்கு விவாகரத்து நடைபெற்றுள்ளதாக கூறி வந்த நிலையில், தற்போது இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.