புதிய மின் கட்டணத் திருத்தத்திற்கு இணைந்தவகையில், நீர்க் கட்டணத்தைக் குறைப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகவும், இந்த வாரத்துக்குள் அது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அத்துடன், மாதாந்தம் 2.8 பில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்த நீர் வழங்கல் சபையினால் தற்போது 6.2 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்ட முடிந்துள்ளதாகவும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்,
“மின் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்தமைக்காக அமைச்சர் கஞ்சன விஜேசேகரவை பாராட்டுகின்றோம். நீர் விநியோகம் என்பது மின் கட்டணத்தைச் சார்ந்து இருக்கும் துறையாகும். எனவே, நீர் கட்டணத்தை குறைக்க இந்த மின் கட்டண திருத்தம் உதவும் என நம்பப்படுகிறது.
நீர் வழங்கல் பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமைகின்றது. மின் கட்டணம் குறைக்கப்பட்டால், நீர்க் கட்டணமும் குறைக்கப்படும் என, நாம் ஏற்கனவே உறுதியளித்தோம். தற்போது, வட்டி விகிதங்கள் 26% இல் இருந்து 11% ஆக குறைந்துள்ளன. அதனை கருத்தில் கொண்டு டொலரின் பெறுமதியின் அடிப்படையில் நீர்க் கட்டணத்தை குறைப்பது குறித்து ஆராயப்படுகிறது. நீர் வழங்கல் சபைக்குத் தேவையான இரசாயனப் பொருட்களின் விலைகள், டொலரை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என்பதைக் கூற வேண்டும். இந்த வாரத்திற்குள் நீர்க் கட்டணத்தை எவ்வளவு குறைக்கலாம் என்பது குறித்து முடிவு செய்ய முடியும்.
2023 ஜனவரி மாதத்தில் நான் இந்த அமைச்சைப் பொறுப்பேற்றபோது, 1000 புதிய தொடர்புகளையேனும் வழங்க முடியவில்லை. 800 மில்லியன் டொலர் கடனுடனும், சுமார் 2.8 பில்லியன் ரூபா மாதாந்த நட்டத்துடனும் நீர் வழங்கல் சபையுடனான அமைச்சு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.4.5 பில்லியன் ரூபா மாதாந்த தொடர் செலவினங்களைச் செய்யும் நீர் வழங்கல் சபையானது நாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.
தற்போது, நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அது மாத்திரமன்றி எமது 1,000 இற்கும் குறைவான இணைப்புகளை 113,000 வரை விரிவுபடுத்தியுள்ளோம். வரும் வாரங்களில் மேலும் 30,000 இணைப்புகளை வழங்க எதிர்பார்க்கிறோம். நீர் வழங்கல் சபையை மாதாந்தம் 2.8 பில்லியன் ரூபா நட்டத்தில் இருந்து 6.2 பில்லியன் ரூபா மாதாந்த இலாபம் ஈட்டுக்கும் நிலைக்கு மாற்றியுள்ளோம். 4.5 பில்லியன் ரூபா தொடர்ச்சியான செலவீனத்துடன் எஞ்சிய தொகை கடன் சேவைக்காக பயன்படுத்தப்பட்டு நீர் வழங்கல் துறை நிலைபேறான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் மூலம், கொள்கை அடிப்படையிலான கடனாக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர்களைப் பெற்றுள்ளோம். அதற்கு இணையாக, நீர் வழங்கல் துறைக்கும், உப வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் மறுசீரமைப்பு முன்மொழிவுகளான நீர்க் கட்டண சூத்திரம் மற்றும் முதலீட்டுக் கட்டமைப்பு அளவுகோல்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்று சபையால் அது அங்கீகரிக்கப்பட்டவுடன் மேலும் 100 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.மேலும், நீர்க் கட்டணத்தை செலுத்துவதில் பாதிக்கப்படக்கூடியவர்களையும் மிகவும் ஏழ்மையான மக்களையும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். சேவை நிறுவனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் மத நிறுவனங்களுக்கும் மானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், “அஸ்வெசும” வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதுடன், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் காணி உரிமைகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்துவது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஜனாதிபதி மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களில் மலையக மக்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர். மலையக மக்களுக்கு பிரச்சினைகள் இருந்தாலும், நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்ற நம்பிக்கை உள்ளது. இன்று மலையக மக்களின் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு வருகை தந்த எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். கடந்த வருடம் இவ்வாறானதொரு கலந்துரையாடலுக்கு மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தாலும், எதிர்கட்சியில் உள்ளவர்கள் அரசியல் காரணங்களுக்காக அதில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் இம்முறை அவர்கள் வருகை தந்திருந்தார்கள். தற்போது ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் வெற்றிபெற்று வருகின்றமை குறித்து அவர்களுக்கும் தெரிந்துள்ளது. இதன் காரணமாக இப்போது எங்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மலையக மக்களுக்கு பிரச்சினைகள் இருந்தாலும் கூட நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. நாம் பல்வேறு சிக்கல்களை கடந்து வந்துள்ளோம். எதுவும் சுலபமாக கிடைப்பதில்லை. ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் பெரும்பாலான பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்பளத்தை உயர்த்த ஒத்துக்கொண்டுள்ளன. அடுத்த மாதம் பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைச்சுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அதில் முழுமையான தீர்வு எட்டப்படலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும், எமது நீண்டநாள் கோரிக்கையின் பிரகாரம் காணி உரிமை விடயம் தொடர்பில் ஜனாதிபதி கடந்த திங்கட்கிழமை அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அது குறித்து இன்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. மலையகத்தில் அதிகளவான குடும்பங்கள் வாழும் பிரதேசங்களுக்கு ஒரு கிராம உத்தியோகத்தர் என்ற அடிப்படையில் இருப்பதால்தான் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அரசாங்கத்தின் நலன்புரி நலன்கள் அந்த மக்களுக்கு சென்றடைவதில்லை. இதற்கு காரணம் மலையக மக்களுக்கு பிரஜா உரிமை கிடைக்க முன்னர் மேற்கொள்ளப்பட்ட காணி எல்லை நிர்ணயத்தில் உள்ள சிக்கல் நிலையாகும். அதனால் மலையக மக்களின் முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது. இப்பிரச்சினையைத் தீர்க்கவே மலையகப் பிரதேசங்களை கிராமங்களாக அங்கீகரிக்கும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி அமைச்சரவைப் பத்திரத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மலையக மக்களுக்கு வீட்டு உரிமையே முதலில் வழங்கப்பட வேண்டும் என்று ஒரு சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால், வீட்டு உரிமை என்பது வேறு. காணி உரிமை என்பது வேறு. காணி உரிமை வழங்கப்பட்டால் வீடுகளை நிர்மாணிக்கக் கூடிய வசதி உள்ளவர்கள் அவர்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் உரிமை கிடைக்கும். மலையக மக்களுக்காக 4000 மில்லியன் நிதி கடந்த வருடம் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியின் ஊடாக 1000 காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம். ஏற்கனவே வீடுகள் இருந்தும் காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாதவர்களுக்கும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்க எதிர்பார்த்துள்ளோம். எனவே சரியான தீர்மானங்கள் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பியவருக்கே எதிர்கால ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கவேண்டும் என்பதே எனது தனிப்பிட்ட நிலைப்பாடாகும்” என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.