இன்று (17) நமுனுகுல கந்தசேன தோட்டப் பகுதியில் வெட்டி சாய்க்கப்பட்ட மரம் ஒன்றில் சிக்குண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் 66 வயதுடைய நமுனுகுலை கனவல்ல 13 ம் கட்டைப் பகுதியை சேர்ந்த வேலு கருணாகரன் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தின் உரிமையாளர் தனது காணியில் உள்ள கரப்பன்டைன் மரத்தினால் தனது வீட்டுக்கு ஆபத்தான விளைவுகள் ஏதும் ஏற்பட கூடும் என எண்ணி சட்டபூர்வமாக அனுமதி பத்திரத்தை பெற்று குறித்த மரத்தை இன்று காலையில் வெட்டியுள்ளார்.
இதன்போது இடத்தின் உரிமையாளர் உட்பட மேலும் சிலர் மரத்தை வெட்டியதாகவும் மரம் குறித்த வீட்டுப் பகுதியில் விழாமல் இருக்க மரணித்த நபர் உட்பட மேலும் இருவர் மரத்தை கயிரை கட்டி வேறொரு திசைக்கு இழுத்ததாகவும் இதன்போது மரத்தை வெட்டியவர்கள் மரம் சாயப் போகின்றது எனவே மரத்தின் இழுக்கும் மூவரையும் ஓடுமாறு மரத்தை வெட்டியவர்கள் கூறியதாகவும் இதன்போது இருவர் வேறு திசையை நோக்கி ஓடியதாகவும் மரணித்த நபர் மரம் சாயும் திசையில் ஓடியதாகவும் மரத்தின் கிளைகள் குறித்த நபரின் மீது பட்டதினால் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து நமுனுகுலை பொலிஸ் நிலையம் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திலேயே காணப்படுவதாகவும் இருப்பினும் குறித்த பகுதி ஹிங்குருகடுவ பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் சுமார் 25 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஹிங்குருகடுவ பொலிஸாரே சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும் சம்பவ இடத்திற்கு ஹிங்குருகடுவ பொலிஸார் வருகை தருவதற்கு சுமார் 1 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் தேவைப்படுவதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பதுளை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவின் ஆலோசனையின் பேரில் ஹிங்குருகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனரத் பண்டாரவின் ஆலோசனையின் பேரில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா