- இது 2002, 2003 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தவிருந்த திட்டமாகும்.
- நீதிமன்றத்தினால் அன்று இந்த திட்டத்தை நிறுத்தியிருக்காவிட்டால் 20 ஆண்டுகளுக்கு முன்பு மக்களுக்கு நிரந்தர காணி உறுதி கிடைத்திருக்கும் – மஹியங்கனையில் ஜனாதிபதி தெரிவிப்பு.
‘உறுமய’ வேலைத் திட்டம் 2002ஆம், 2003 ஆம் ஆண்டுகளில் இந்த நாட்டில் அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் எனவும் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அதனை நிறுத்த வேண்டி ஏற்பட்டதாகவும் அன்று அந்தத் திட்டத்தை செயல்படுத்தியிருந்தால், 20 வருடங்களுக்கு முன்னர் மக்களுக்கு நிரந்தர காணி உறுதி கிடைத்திருக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்
நீதித்துறையின் அதிகாரம் பாராளுமன்றத்தில் உள்ளது என்பதை நினைவுபடுத்திய ஜனாதிபதி, பாராளுமன்றத்தின் நிறைவேற்று அதிகாரத்தில் நீதித்துறை தலையிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தான் எப்போதும் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மஹியங்கனை பொது விளையாட்டரங்கில் நேற்று (14) இடம்பெற்ற உறுமய நிரந்தர காணி உறுதி வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
20 இலட்சம் நிரந்தர காணி உறுதி வழங்கும் ‘உறுமய’ தேசிய திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் தகுதி பெற்ற 65,393 பேரில் 662 பேருக்கு நிரந்தர காணி உறுதிகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடையாளமாக சிலருக்கு காணி உறுதிகளை வழங்கிவைத்தார்.
இத்துடன் இணைந்ததாக பதுளை மாவட்டத்திலுள்ள நான்கு பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்களையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கி வைத்தார். அத்துடன், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஹியங்கனை பொது விளையாட்டரங்கின் பிரதான கேட்போர் கூடத்தையும் திறந்து வைத்தார்.
உறுமய நிரந்தர காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:
”காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டம் இந்த நாட்டில் 2002 ஆம், 2003 ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். ஆனால் நீதிமன்றம் அதை தடுத்து நிறுத்தியது. இந்த நாட்டின் காணி கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் நான் செயற்பட்டேன். காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் எனது தாத்தா எஸ்.ஏ.விக்கிரமசிங்கவினால் தயாரிக்கப்பட்டது. அவர் அப்போது வடமத்திய மாகாண அரசாங்கத்தின் அரசாங்க அதிபராக பணியாற்றினார்.
டி.எஸ். சேனாநாயக்க விவசாய அமைச்சராக அநுராதபுரத்தில் உள்ள பழைய குளங்களை மேற்பார்வை செய்வதற்காக வந்தார். சில குளங்கள் புனரமைக்கப்பட்டன. பராக்கிரம சமுத்திரம் உட்பட மற்றவை புனரமைக்கப்படவிருந்தன. அதன்பின்னரே, அந்த பகுதி மக்களை குடியமர்த்துவதில் கவனம் செலுத்தப்பட்டது.
காணி அபிவிருத்தி திணைக்களம் என்ற புதிய திணைக்களம் என்ற பெயரில் புதிய நிறுவனமொன்றை நிறுவவுள்ளதாக எனது தாத்தா சீ.எல். விக்ரமசிங்கவுக்கு, டி.எஸ். சேனநாயக்க அறிவித்தார். அதனை பொறுப்பேற்க வருமாறு கோரினார். அதற்குத் தேவையான சட்டங்களைத் தயாரிக்கவும் அவர் கேட்டுக் கொண்டார். அதன்படி சட்டங்களைத் தயாரித்து நிறைவேற்றி முதல் காணி அபிவிருத்தி ஆணையாளராகப் பதவியேற்று மக்களை இந்தப் பகுதிக்கு அழைத்து வந்து குடியமர்த்தினார். ஈர வலயத்தின் நிலமற்ற மக்களைக் குடியமர்த்தி, இந்தப் பகுதிகளில் கிராமங்களை நிறுவி, அந்தக் கிராமங்களையும் மேம்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது. அந்த வேலைத்திட்டத்திற்காகவே இந்த சட்டம் தயாரிக்கப்பட்டது.
அவருடைய ஆவணங்களைப் படித்தபோது, ஒரு சிக்கல் எழுந்தது. அந்த சமயம் இலங்கையில் பலருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. எனவே, பல்வேறு நபர்கள் வந்து அந்த நபர்களை பல்வேறு ஒப்பந்தங்களில் இணைத்து அவர்களுக்குக் கடன் கொடுத்து நிலத்தை அபகரிக்க முயன்றனர். அதன் காரணமாகவே நில உரிமை முறை உருவாக்கப்பட்டது.
1935இற்கும் இன்றைக்கும் இடையில் பாரிய வித்தியாசம் இருக்கிறது. இன்று, இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களிலும் நன்கு படித்த பட்டதாரிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்கள் இருக்கின்றனர். எனவே, இன்று அவ்வாறான நிலை ஏற்படாது. ஆனால் மக்களுக்கு அப்போது அவ்வாறான அறிவு இல்லாததால் மக்கள் ஏமாற்றப்படும் வாய்ப்பு இருந்தது.
நாங்கள் மகாவலி திட்டத்தை ஆரம்பிக்கும் போது இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். ஆனால் 10-15 ஆண்டுகளுக்குப் பிறகு அது தேவைப்படவில்லை. அந்த மக்கள் நிலங்களைப் பாதுகாத்தனர். அந்த மக்கள் நிலத்தை விற்க மாட்டார்கள் என்று நம்பினேன். ஆனால், அப்போது மக்கள் இந்த நில உரிமையை எதிர்பார்த்தனர். இதன்படி காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்த காணிகளை வழங்குவதற்கு புதிய சட்டம் தேவைப்பட்டது. அந்த சட்ட வரைவை நான் முன்வைத்தேன். ஆனால், அத்தகைய சட்டத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது.
அந்த சமயத்தில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வாய்ப்பு கிடைத்திருந்தால் 20 வருடங்களுக்கு முன்னரே மக்களின் இலவச காணி உரிமையை உறுதிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் அதன் பிறகு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நிரந்தரமாக காணிகள் வழங்கப்பட்டன. காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் அரச காணியை ஷங்கிரிலா ஹோட்டலுக்கு வழங்க முடியுமானால் ஜனாதிபதி என்ற முறையில் 20 இலட்சம் மக்களுக்கு காணி உரிமையை ஏன் வழங்க முடியாது என நான் கேட்க விரும்புகின்றேன்.
இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்கள். ஆனால் அதிகார வரம்பு நீதிமன்றத்திற்கு அன்றி பாராளுமன்றத்திற்கே உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தின் நிறைவேற்று அதிகாரத்தில் நீதித்துறை தலையிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் நான் எப்போதும் இருக்கிறேன்.
20 ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்படக்கூடிய திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. இப்போது இந்த நில உரிமைகளை மக்களுக்கு வழங்கி வருகிறோம். நான் முதன்முதலில் இந்தப் பிரதேசத்திற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு வந்தேன். அப்போது இந்த பிரதேசம் அடர்ந்த காடாக இருந்தது. மீண்டும் 1978 ஆம் ஆண்டு அமைச்சர் காமினி திஸாநாயக்க உள்ளிட்ட குழுவுடன் இங்கு வந்து உளுஹிட்டிய திட்டத்தை ஆரம்பித்து வைத்தோம். உளுஹிடியில் இருந்து வந்த அனைவருக்கும் நிரந்தர காணி உறுதி வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்க இங்கு வந்துள்ளேன். இது உங்கள் உரிமை. இது அரசாங்கத்திற்குச் சொந்தமானது அல்ல. கொத்மலை நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்காக பொது மக்களின் காணிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டன. அத்துடன் தெல்தெனிய நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்காக காணி பெறப்பட்டன. அந்த மக்கள் இந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். இவை உங்களுக்குச் சொந்தமான நிலங்கள். அந்த உரிமையை உறுதி செய்யும் வகையில் இன்று இந்த நிரந்தர காணிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை உங்கள் முன்னேற்றத்தின் தொடக்கமாக மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதற்குத் தேவையான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என ஜனாதிபதி தெரிவித்தார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா:
”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் ‘உறுமய’ நிரந்தர காணி உறுதித் திட்டத்தின் கீழ் பதுளை மாவட்ட மக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். பதுளை மாவட்டத்தில் சமூக அநீதிக்கு ஆளான மக்கள் உள்ளனர். உலக வரலாற்றில் நிலம் கையகப்படுத்தும் காரணங்களால் போராட்டங்கள் வெடித்தன. நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருந்த நேரத்தில் தற்போதைய ஜனாதிபதி பாரிய பொறுப்பை ஏற்றார். குறுகிய அரசியல் நோக்கங்களின்றி பல புதிய எண்ணக்கருக்களை நாட்டுக்கு முன்வைத்தார். அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்காக சரியான முடிவுகளை எடுத்தார். அச்சமற்ற, கடனற்ற தலைவர் நாட்டுக்கு தேவை. தான் ஏற்றுக்கொண்ட சவாலை நிறைவேற்றிய தலைவர் அவர். சரிந்த நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தினார். விவசாயிகளுக்கு உரம் மற்றும் எரிபொருள் வழங்கப்பட்டது. இவ்வளவு உறுதியான பணியை ஆற்றிய தேசத்தின் மீது கடனும் பயமும் இல்லாத ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே” என அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ:
”அன்று ஜனாதிபதி ஏற்றுக்கொண்ட சவால் சாதாரணமான ஒன்றல்ல. நாட்டு மக்களை தூக்கி நிறுத்தவும், நாட்டை மீளக் கட்டியெழுப்பவும் அவர் தனியாகவே தீர்மானம் எடுத்தார். உலகத்தின் முன் இலங்கையின் பெயரை உயர்த்த அவர் பாடுபட்டார்.
நெருக்கடியான சூழ்நிலையில், மஹியங்கனை மக்கள் பாரிய விடயங்களை எதிர்பார்க்கவில்லை. விவசாயிகள் உரம் மற்றும் எரிபொருளை மட்டுமே கேட்டனர். இன்று நீங்கள் பெற்றுக்கொள்ளும் இந்த காணி பத்திரம் சாதாரணமான ஒன்றல்ல. இது உங்கள் உரிமை. பரம்பரை பரம்பரையாக கைமாற்றப்பட வேண்டிய காணி உறுதி இது. உங்களின் வாரிசுக்கு இதனை நீங்கள் கொடுக்க வேண்டும் என்பதால் இந்த திட்டத்திற்கு ‘உறுமய’ என்று பெயர் வைக்கப்பட்டது. இது அரசியல் நோக்கத்திற்காக செயல்படுத்தப்பட்ட திட்டம் அல்ல. இந்தத் திட்டத்தில் அரசியலை புகுத்த வேண்டாம் என அரச அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். அப்படி நடந்தால் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க:
”எரிந்துகொண்டிருந் நாட்டையே ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார். அவரது வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது. அவ்வாறானதொரு நாட்டில் காணி உறுதிப்பத்திரம் வழங்குவது எப்படி இருந்தாலும், மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. யார் என்ன கூறினாலும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவார். அந்த முடிவை இன்று மக்கள் எடுத்துள்ளனர். ஊவா வெல்லஸ்ஸ மக்களே இந்நாட்டின் அரசியலை மாற்றினார்கள் என்பதைக் கூற வேண்டும். எனவே ஜனாதிபதியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே:
”இன்று பதுளை மாவட்ட மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாகும். பல ஆண்டுகளாக மக்களிடையே இருந்த எதிர்பார்ப்பு நிறைவேறிய நாள்.
‘உறுமய’ காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வேலைத் திட்டம் ஜனாதிபதியின் வரவு செலவு திட்ட பிரேரணைக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படுத்தப்படுகின்றது.
அதனை நனவாக்கும் வகையில் முதல் வேலைத்திட்டம் தம்புள்ளை நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பதுளை மாவட்டத்தில் 66,000இற்கும் அதிகமானோர் காணி உறுதிப் பத்திரங்களைப் பெறவுள்ளனர். அந்த வகையில் பதுளை மக்கள் சார்பாக ஜனாதிபதிக்கு எமது கௌரவத்தை சமர்ப்பிக்கின்றோம். மேலும், மகாவலி “சி“வலயத்தில் காணி அனுமதிப்பத்திரம் கூட இல்லாத குடும்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அவை தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்” என்று அவர் தெரிவித்தார்.
ஊவா மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான மேஜர் சுதர்சன தெனிபிட்டிய, நாலக கோட்டேகொட, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் சந்திரா ஹேரத், மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மகேந்திர அபேவர்தன, பதுளை மாவட்டச் செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன மற்றும் ஆதிவாசி தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ, பிரதேச அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், காணி உறுதிப் பத்திரம் பெறுவோர் என பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.