யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் நடைபெற்றது. இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் பதிவு செய்யும் நோக்கில் விளையாடின. இருந்த போதும் முதல் பாதியில் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. கிடைத்த ப்ரீ கிக்கை இரண்டு அணி வீரர்களும் தவறவிட்டனர்.
இந்த சூழலில் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும், ஸ்பெயினின் இளம் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் 47ஆவது நிமிடத்தில் அற்புதமான கோல் பதிவு செய்தார். தரையோடு தரையாக சென்ற அந்த பந்து கோல் ஆனது. இதையடுத்து 73ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் பால்மர் கோல் பதிவு செய்தார். பாக்ஸுக்கு வெளியே சில மீட்டர் தொலைவில் இருந்து பலமாக ஓங்கி உதைக்கப்பட்ட அந்த ஷாட் கோல் ஆனது. சுமார் 118 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து கோல் போஸ்ட்டுக்குள் சென்றது. இதன் மூலம் ஆட்டம் 1-1 என சமன் ஆனது.
இதனால், போட்டி முடியும் நேரம் நெருங்க நெருங்க, ஸ்பெயின் அணி வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பலனாக 86ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் மைக்கெல் கோல் அடித்தார். இவர் மொராட்டாவுக்கு மாற்றாக களத்துக்கு வந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டநேர இறுதியில், 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி, சாம்பியன் பட்டம் வென்றது.
இங்கிலாந்து அணி அடுத்தடுத்து இரண்டு யூரோ கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதும், தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி, இதுவரை ஒருமுறை கூட யூரோ கோப்பையை வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யூரோ கோப்பை தொடரில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்று, அதிக முறை பட்டம் வென்ற அணி என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றது. யூரோ தொடரில் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தையும் வென்ற முதல் அணி என்ற சாதனையை ஸ்பெயின் படைத்துள்ளது. யுரோ கோப்பை வென்ற ஸ்பெயின் அணிக்கு இந்திய மதிப்பில் 254 கோடி ரூபாய் பரித்தொகை வழங்கப்பட்டது.